இந்திய போர் விமானங்கள் நடத்திய துல்லிய தாக்குதல்கள் பரவலான வரவேற்பை பெற்றுள்ளன.
புல்வாமா பயங்கரவாத தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்ட நாற்பதுக்கும் மேலான இந்திய வீரர்களின் மரணத்திற்கு இந்தியா பதிலடி கொடுத்திருக்கிறது.
தாக்குதல் நடத்திய இடம் தீவிரவாதிகளின் முகாம்கள். எனவே இது இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய போர் ஆகாது. ஆனாலும் இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் அறிவித்திருக்கிறது.
எனவே நிச்சயம் அடுத்து ஒரு தாக்குதலை நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அதற்கும் பதிலடி கொடுத்துத்தான் ஆக வேண்டும்.
புல்வாமா தாக்குதலை நடத்தி கொடூரமாக நாற்பதுக்கும் மேல் இந்திய வீரர்களை தற்கொலைத் தாக்குதலில் கொலை செய்தவன் பாகிஸ்தானியல்ல. காஷ்மீரி இளைஞர்தான். ஆனால் அவனுக்கு பயிற்சியளித்தது பாகிஸ்தானில் நிலை கொண்டுள்ள தீவிரவாத இயக்கம். தாக்குதலுக்கு பொறுப்பு நாங்கள் தான் என்று பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று நாமும் விடுதலையான காஷ்மீர் என்று பாகிஸ்தானும் சொல்லும் இடத்தில்தான் இயங்கி வருகிறது. லஷ்கர் இ தொய்பா, ஐ எஸ் ஐ எஸ், ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற தீவிரவாத இயக்கங்களும் அங்கு இயங்கி வருகின்றன. எதையும் பாகிஸ்தான் அரசால் கட்டுப் படுத்த முடியவில்லை.
எப்படி இருந்தாலும் பிரச்னை இப்போது ஓயப்போவதில்லை.
பாகிஸ்தான் எப்படி எப்போது பதிலடி கொடுக்கும்?. அதற்கு இந்தியா எப்படி பல மடங்கு திருப்பிக் கொடுக்கும்? இது போரில் முடியுமா? போர் வருமா வராதா? சர்வதேச நாடுகள் தலையிட்டு சமரசம் செய்ய வாய்ப்புகள் உண்டா இல்லையா?
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் தேடுவதற்குள் அல்லது பதில் கிடைப்பதற்குள் பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து விடும்.
ராணுவ தாக்குதல்களை அரசியல் ஆக்க வேண்டாம் என்று பாஜக அறிவித்திருக்கிறது. ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய வெற்றிக்கு சொந்தக்காரர் மோடி என்றும் அவரால்தான் முடியும் என்றும் பிரச்சாரத்தை பாஜக சார்பில் தொடங்கி யாகி விட்டது. பாஜகவின் வேண்டுகோள் செவி சாய்க்கப் படும் வாய்ப்பு நிச்சயமாக இல்லை.
எல்லா எதிர்க்கட்சிகளும் விமானப் படையின் தாக்குதலை வரவேற்று இருக்கின்றன. ஆளும் கட்சி எதிர்க்கட்சி வேறுபாடு தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இல்லை.
கார்கில் போர் வாஜ்பாய்க்கு தந்த புகழை இந்த தாக்குதல் மோடிக்கு தருமா என்றால் சந்தேகம்தான். ஏனென்றால் வாஜ்பாய் மதவாதி என்ற பெயரை எடுக்க வில்லை.
இந்திய வாக்காளர்கள் அறிவுக்கூர்மை மிக்கவர்கள். அவர்களுக்கு பிரச்னைகளை பகுத்துப்பார்க்கத் தெரியும்.
மோடி இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் உருவாக்கிய பிரச்னைகள் அடுத்த பத்தாண்டுகளில் தீர்க்க முடியாதவை என்பதை அவர்கள் உணர்வார்கள். மீண்டும் நீடித்தால் அவரால் உருவாகும் பிரச்னைகள் இந்தியாவை நிரந்தர படுகுழிக்குள் தள்ளி விடும் என்பதையும் உணர்ந்தவர்கள். எனவே சூழ்ந்திருக்கும் போர்மேகம் மோடிக்கு எந்த வகையிலும் தேர்தல் வெற்றிக்கு உதவாது.