காஷ்மீர் பிரச்னையில் தவறுக்கு மேல் தவறாக செய்து கொண்டிருக்கிறது மத்திய அரசு.
இதற்கான விலையை நாம்தான் கொடுக்க வேண்டும்.
அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 370 & 35A அகற்றப்பட்டது இருக்கட்டும். அதற்காக பாஜக அரசு கைக்கொண்ட வழிமுறைகள் சரியா என்பதை இப்போது உச்ச நீதிமன்றம் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். அது இப்போது சொல்லும் என்று தோன்ற வில்லை. பிரச்னை வேறு வடிவம் எடுத்து அல்லது ஆறிப்போய் அதற்குப் பிறகுதான் தீர்ப்பு வரும். அப்போது தீர்ப்புக்கு முக்கியத்துவம் இருக்குமா என்பது கூட இப்போது சொல்ல முடியாது.
ஆனால் பள்ளத்தாக்கு காஷ்மீரிகள் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. அதற்குப் பிறகுதான் அவர்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள். சமாதானமாக போவதா அல்லது முடிவற்ற போராட்டத்துக்குள் நுழைவதா என்பதை.
சிக்கிம் எப்படி இந்தியாவோடு இணைந்தது? 16/04/1975ல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன்பின் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு 16/05/1975 முதல் இந்தியாவோடு இணைந்தது.
கோவா- போர்த்துகீசியர்கள் வெளியேற மறுத்தால் ராணுவப் படையெடுப்பு நடத்தி 18/12/1961ல் இந்தியாவோடு இணைக்கப்பட்டது.
அதேபோல் காஷ்மீர் – 26/10/1947ல் மகாராஜா ஹரிசிங் ஏற்படுத்திய இணைப்பு ஆவணம் மூலம் இந்தியாவோடு இணைந்தது. அப்போது இந்தியா வசம் ராணுவம், தொலைதொடர்பு, நாணயம், அயல்நாட்டு உறவு என்ற நான்கு துறைகள் மட்டும்தான் இருந்தன. அதை 1956 முதல் 1994 வரை குடியரசுத் தலைவர் இட்ட 47 ஆணைகள் படி 94 துறைகளில் மாநில அரசின் சம்மதத்துடன் மத்திய அரசுக்கு விரிவாக்கப்பட்டது.
அது மட்டுமல்ல இதே 370 பிரிவை சுட்டிக் காட்டி வட கிழக்கு மாநிலங்களில் மிசோரம், அருணாச்சல் பிரதேஷ், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து போன்ற பகுதிகளில் ஏற்பட்ட எதிர்ப்பு போராட்டங்களை இந்தியா முறியடித்தது. அதாவது இதேபோல் உங்களுக்கும் சிறப்பு சலுகைகளை தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்து அவர்களை ம்டக்கினோம். இப்போது காஷ்மீர் சலுகை பறிக்கப்பட்டவுடன் எங்கே இந்தியா நமக்கு கொடுத்த சலுகைகளையும் பறிக்குமோ என்ற அச்சம் அவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
இது நாட்டுக்கு நல்லதா? எல்லாம் போகட்டும். எதற்கு பரூக் அப்துல்லாவையும், உமர அப்துல்லாவையும், மெகபூபா முப்தியையும் வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்கள்?
அவர்கள் என்ன தீவிரவாதிகளா?
அடக்க அடக்க தீவிரவாதம்தான் வளரும்.
எனவே காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய் என்ற குரல் இந்தியாவெங்கும் ஒலிக்கட்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி திமுக பாராளுமன்றத்தின் முன் வரும் 22ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்து அனைத்து கட்சிகளின் ஆதரவை கோரி உள்ளது. பார்க்கலாம் யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்கள் என்று?
ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் சர்வாதிகாரத்தின் மூலம் ஒருபோதும் கட்டுப் படுத்தி விட முடியாது.