ரபேல் விமான கொள்முதலில் முறைகேடு எதுவும் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு சில ஆவணங்களை ‘இந்து’ பத்திரிகை வெளியிட்டதை தொடர்ந்து அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய பிரசாந்த் பூஷன் அருண்ஷோரி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் மனு செய்தனர்.
அதில் மத்திய அரசு கொடுத்த ஆட்சேபம்தான் இப்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.
ரகசிய ஆவணங்களை எல்லாம் நீதிமன்றத்தில் யாராவது திருடி சமர்ப்பித்தால் அவருக்கு என்ன தண்டனை என்று மத்திய அரசு கேட்கிறது.
உச்ச நீதி மன்றம் அதற்கு பதில் கேள்வி கேட்டது. அரசு ஆவண ரகசிய சட்டத்தில் ( Official Secrets Act ) அப்படி ஏதேனும் ஆவணம் வெளியிடப்பட்டால் அதை வெளியிடுவதில் இருந்தோ நீதிமன்றம் பரிசீலிப்பதில் இருந்தோ தடுப்பதற்கு நிர்வாகத்திற்கு அதிகாரம் அளித்து பாராளுமன்றம் சட்டம் ஏதேனும் இயற்றி இருக்கிறதா ?
இதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் தேச பாதுகாப்பிற்கு ஆபத்து நாட்டுக்கு ஆபத்து என்றெல்லாம் விளக்கம் கூறி மத்திய அரசு வாக்குமூலம் அளித்திருக்கிறது.
இதில் இருந்து ஒன்று வெளியாகிறது. ஆவணம் பரிசீலிக்கப் பட்டால் ரபேல் கொள்முதலில் முறைகேடுகள் வெளிவந்து விடும் என்று மோடி அரசு அஞ்சுகிறது.
இந்த வழக்கில் இருந்து ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிமன்றம் பிரித்து விட்டது.
எனவே உச்ச நீதிமன்றம் பத்திரிகையில் வெளியிடப் பட்ட ஆவணங்களை பரிசீலித்து கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் உள்ளனவா என்பதை மறுபரிசீலனை செய்யும் என்று நிச்சயமாக தெரிகிறது.
அப்படி செய்யும்போது விலை நிர்ணயம், முன் அனுபவமே இல்லாத அனில் அம்பானியின் நிறுவனத்தை இந்திய கூட்டாளியாக ஏற்றுக்கொண்டது, அந்த நிறுவனத்திற்கு வேறு வகையில் ஆயிரம் கோடிக்கும் மேல் வரி விலக்கு அளித்தது போன்ற எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.
தீர்ப்பு வரும்போது மோடி அரசின் முகத்திரை கிழியும் என்பதில் சந்தேகம் இல்லை.