மகாத்மா காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று மார் தட்டி சொல்கிறவர்கள் இந்து மகா சபை கூட்டம் . நாதுராம் கோட்சே இந்து மகா சபையை சேர்ந்தவர் என்பதினால் அவரது நினைவு தினத்தை ஆண்டு தோறும் அனுசரிப்பவர்கள்.
நாதுராமிற்கு தூக்கு தண்டணை நிறைவேற்றப் பட்டாலும் அவரது சகோதரர் கோபால் கோட்செவுக்கு 14 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு அவரை விடுதலை செய்தது காங்கிரஸ் கட்சி.
அந்தக் கொலைகாரனுக்கு சிலை எழுப்ப இடம் கேட்டு மத்திய பிரதேச அரசுக்கு இந்து மகா சபை கேட்க அரசு மறுத்ததால் இந்து மகா சபை அலுவலகத்திலேயே 32 அங்குல உயர மார்பளவு சிலையை நிறுவி அதற்கு கும்பாபிஷேகம் வேறு நடத்தி இருக்கிறார்கள்.
இது எங்கள் சொத்து என்பதால் யாரும் ஆட்சேபிக்க முடியாது என்பது அவர்களின் வாதம்.
இதற்கு காங்கிரசின் ஜோதிர் ஆதித்யா சிந்தியா ஆட்சேபணை தெரிவித்து காந்தியை இழிவு படுத்தியவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
ஆட்சி நடத்துவது பா ஜ க . வெளிப்படையாக சொல்ல மாட்டார்களே தவிர இந்து மகா சபைக்கும் அவர்களுக்கும் பெருத்த வேறுபாடு ஒன்றும் கிடையாது.
தேச தந்தை என போற்றப் படுகிற காந்தியை சுட்டவனுக்கு கோவில் கட்டி வழிபடுவோம் என்று சொல்லி அதை நிறைவேற்றி காட்டுகிறவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் அதற்கு அவர்களும் உடந்தை என்றுதான் பொருள்.
கொலைகாரனுக்கு கோவில் கட்டியவனை விட அவனை விட்டு வைத்திருக்கிறவன் தான் கொலைகாரனை விட மோசமான குற்றவாளி.
கோட்சே சிலை இருக்கும் வரை அதை விட்டு வைத்திருக்கும் சக்திகளின் மீது மக்களின் கோபம் நிலைத்திருக்கும் .