மோடி அரசின் காஷ்மீர் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் தவிர எந்த முஸ்லிம் நாடும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
சவுதி இளவரசர் இந்தியா என்பது இந்துக்களுக்கானது என்ற தனது புரிதலை வெளிப்படுத்தி விட்டார்.
ஐநாவிலோ வேறு எங்குமோ இனி சர்வதேச அளவில் காஷ்மீர் பற்றி விவாதமோ பேச்சு வார்த்தையோ நடவடிக்கையோ வர வாப்புக்கள் குறைவு.
உள்நாட்டிலும் பெருத்த ஆட்சேபணை இல்லை. காங்கிரசே இதில் பிளவு பட்டிருக்கிறது. சில தலைவர்கள் ஆதரவு தெரிவித்த பிறகு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
எதிர்கட்சிகளை இணைத்து ஆர்ப்பாட்டம் நடத்திய ஒரே கட்சி திமுக. அகில இந்திய ரீதியில் இன்று பாஜகவுக்கு எதிர்க்கட்சியாக செயல்படுவது திமுகதான்.
திமுகவின் மதிப்பு இதனால் மிகவும் கூடியிருக்கிறது.
அதுவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் நடந்த ஆர்ப்பாட்டம் காஷ்மீர் தலைவர்களை விடுவிக்க மட்டுமே என்று தெளிவு படுத்திவிட்டார். 370 பிரிவு நீக்கத்தை பொருத்தவரை எங்களது எதிர்ப்பு அதை நீக்க கடைபிடிக்கபட்ட விதிமுறை மீறல்கள்தான் என்றும் கூறினார். அதாவது எதிர்ப்பு இருந்தாலும் இந்த ஆர்ப்பாட்டம் தலைவர்களை விடுவிக்கத்தான் என்றார்.
காஷ்மீரில் நிலவரம் உண்மை என்னவென்று தெரியவில்லை. பார்வையிடச் சென்ற எதிர்கட்சித் தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். நிலவரம் அமைதியாக இருந்தால் ஏன் திருப்பி அனுப்ப வேண்டும்?
கல்லெறிதல் தினமும் நடக்கிறது என்றும் இல்லை என்றும் தகவல்கள் மாறி மாறி வருகின்றன. உண்மை நிலவரம் என்ன?
எத்தனை மாதங்களுக்கு ராணுவ கட்டுப்பாட்டில் மக்களை வைத்திருக்க முடியும்?
காஷ்மிரிகளை வென்றெடுக்க மத்திய அரசு 85 மக்கள் நலத் திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி இலவச மின்வசதி, சமையல் காஸ், கடன் உதவி, பென்ஷன் திட்டம் என்று பட்டியல் நீளுகிறது. இதற்கு மக்கள் மயங்குவார்களா?
மத்திய அரசின் திட்டமே அங்கு வசிக்கும் விளிம்பு நிலை மக்கள் நிச்சயம் மயங்குவார்கள் என்பதுதான். அரசியல் அக்கறை இல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்தை மட்டுமே அளவுகோலாக பார்ப்பவர்கள் இங்கே இல்லையா? அங்கு மட்டும் இருக்க மாட்டார்களா? அவர்கள்தான் மத்திய அரசின் இலக்கு.
இதை நிறைவேற்ற ஒரு மாதம் கெடு வைத்திருக்கிறது மத்திய அரசு. அதற்குள் அவர்களை வளைக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறுவழியை யோசிப்பார்கள்.
எப்படி இருந்தாலும் இனி லடாக் தனி பிரதேசம்தான். ஏனென்றால் இதற்காக அவர்கள் வெகுகாலம் போராடி வந்திருக்கிறார்கள். இனி ஒருபோதும் அதை இழக்க அவர்கள் சம்மதிக்க மாட்டர்கள். அந்த பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினர் பாஜக என்பதில் இருந்தே மக்கள் ஆதரவு யாருக்கு என்பது புரியும். காஷ்மீரிகள் லடாக் மக்களை அரவணைத்து செல்வதில் இருந்து தவறி விட்டார்கள் என்பது உண்மை. அதுவும் லடாக்கை முஸ்லிம் பிரதேசமாக முயற்சித்தார்கள் என்பதும் குற்றச்சாட்டு.
இனி சட்ட மன்ற வரையறை ஒரு பிரச்னை ஆகும். எத்தனை லட்சம் மக்களுக்கு ஒரு சட்ட மன்ற உறுப்பினர் என்ற வரையறையை காஷ்மீர் அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக செய்து கொண்டார்கள் என்பது பழைய குற்றச்சாட்டு. இனி அதுவும் விவாதத்துக்கு வரும்.