நாங்கள் தமிழர்கள் என்று நிர்மலாவும் ஜெய்சங்கரும் சொல்வார்களா?!

Niramal-Sitharaman

திருச்சியில் பிறந்து ஆந்திராவில் திருமணம் செய்து டெல்லியில் வாழ்ந்து இப்போது மோடி அமைச்சரவையில் நிதி அமைச்சராக ஆகி இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

தன் திறமையை பல வழிகளிலும் உலகுக்கு காட்டியவர் அவர். நிதித்துறையின் ராஜாங்க அமைச்சராகவும் ராணுவ அமைச்சராகவும் பணியாற்றி அனுபவம் பெற்றவர். ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது தனது திறமையை மேலும் கூட்டுவார் என்று எதிர்பார்த்து பணி சிறக்க மனதார வாழ்த்துவோம்.

கர்நாடக மாநிலத்தில் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். அதனால் காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக செயல்பட முடியாமல் போனவர். நம்மூர் ஒபிஎஸ்-ஐ வரவழைத்து ஒரு மாநிலத்தின் துணை முதல்வர் என்று கூட பார்க்காமல், பார்க்க முடியாது என்று முகத்தில் அறைந்தது போல் திருப்பி அனுப்பியவர். தனது புகழ் இங்கே வேறு மாதிரி இருந்ததால் கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்யக்கூட வராதவர். 

ஆனால் அவரை மந்திரி சபையில் இரண்டு தமிழர்கள் என்று பத்திரிகைகள் எழுதும்போதுதான் சற்று வருத்தமாக இருக்கிறது. தான் தமிழர் என்று எப்போதாவது நிர்மலா சொல்லி இருக்கிறாரா? நீங்கள் யார் என்றால் நான் இந்தியர் என்பார். மாநில அடையாளத்தை பெரிதாக வெளிப்படுத்திக்கொள்ள விரும்பியதில்லை. மாநில அடையாளம் வேண்டாம் எல்லாரும் இந்தியர்கள் என்ற அடையாளம் போதாதா என்று கூட கேட்கலாம்.

அதைப்போல் தான் ஜெய்சங்கர் சுப்பிரமணியன் அவர்களும். அவர் திருச்சியில் பிறந்து டெல்லிக்கு குடியேறி அங்கேயே படித்து டெல்லிவாசியாகவே வாழ்ந்து அவரது தகப்பனார் போலவே வாழ்வில் பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டு இருப்பவர்.    வெளி உறவுத் துறை செயலாளராக பணியாற்றி 2018ல் ஓய்வு பெற்றவர். அரசியல் தொடர்பில்லை என்பதால் மக்களுடன் தொடர்பு இல்லாதவர். அலுவல் ரீதியாக இல்லாமல் மற்ற மக்களுடன் தொடர்பில் இருந்தவர் இல்லை ஜெய்சங்கர். ஆனால் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் தன் கடமையை திறம்பட செய்தவர் என்று பிரதமர் மோடி வைத்த நம்பிக்கை இப்போது அவருக்கு வெளி உறவுத்துறை அமைச்சராகவே ஆக்கி இருக்கிறது. இதுவரை செயலாளர்கள் எவரும் இப்படி அமைச்சர்கள் ஆக்கப் பட்டதில்லை. இனிமேல்தான் அவரை பாஜக பாராளுமன்ற  மேல்சபைக்கு அனுப்பும்.

அவரிடமும் கேளுங்கள் நீங்கள் தமிழரா என்று? தமிழர் என்று சொன்னால் மகிழ்ச்சி.  சொல்வாரா என்று தெரியாது. அவர் மீது குற்றம் இல்லை. அவர் இங்கே வாழ்ந்தவர் இல்லை. இருக்கும் இடத்தில தன் பணிகளை செய்தவர். அதற்காக தமிழ் உணர்வு இல்லாமல் போய்விடுமா என்ற கேள்விக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். அவரும் ஏன் மாநில அடையாளம் போதுமே இந்தியர் என்ற அடையாளம் என்று கூட சொல்லலாம்.

இருவரும் பார்ப்பனர்கள் என்பதால் மட்டும் இந்த கேள்வி எழவில்லை. அவர்களை யாரும் எந்த கேள்வியையும் கேட்கவும் இல்லை. அவர்களது தகுதி திறமை பற்றியும் யாரும் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. ஆனால் இங்கே உள்ள சில பத்திரிகைகள் அவர்களை தமிழர்கள் என்று எழுதும்போதுதான் அதை அவர்களே சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

நம்மூர் அக்கிரகாரத்தில் இருந்து பலரும் மும்பை, டெல்லி, கல்கத்தா என்று பறந்துபோய் வாழ்வதுபோல் அவர்கள் சென்றவர்கள். எங்கே பணி கிடைக்கிறதோ அதுவே அவர்களுக்கு சொந்த ஊர். அதுதான் அவர்களுக்கு ஜன்ம பூமி.

ஜெயசங்கர் காலத்தில் அவர் நினைத்தால் இப்போது இலங்கை தமிழர் பிரச்னையை தீர்க்க முடியும். முயற்சிகளை எடுப்பாரா? இனப்படுகொலைகளுக்கு தண்டனை வாங்கி தர வேண்டாம். பழைய பிரச்னைகளை கிளற வேண்டாம். இப்போது மிச்சமிருக்கும்  தமிழர்களுக்கு உலகமெங்கும் எல்லாருக்கும் கிடைக்கும் மனித உரிமைகளை பெற்றுக்கொடுத்தால் போதும். இலங்கை சிங்கள பேரின வாத அரசிடம் தமிழர்களுக்கு அரசியல்  தீர்வு பெற்றுத் தருவது புதிய அரசியல் சட்டம் இயற்றுவது பற்றி பேசத் தயாரா?

இப்போதுதான் பணிக்கு வந்திருக்கிறார்கள். காரியமாற்ற அவர்களுக்கு நியாயமான அவகாசம் தரத்தான் வேண்டும்.

நீங்கள் தமிழராக இருங்கள் அல்லது இந்தியராக மட்டும் இருங்கள் அது உங்கள் விருப்பம்.

                  நம் எல்லாருடைய விருப்பமும் நீங்கள் நியாயமாக பணி செய்து நீதி செய்ய வேண்டும் சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்பதுதான்.