அதானிக்கு விமான நிலையத்தை தாரை வார்த்ததை ஏற்க மாட்டோம்
2006 ல் டெல்லி ,மும்பை விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்புவித்த இந்திய விமான போக்குவரத்து கழகம் தற்போது மேலும் ஆறு விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்புவிக்க முடிவு செய்ததை அடுத்து நடந்த ஏலத்தில் அதானி குழுமம் ஐந்து விமான நிலைய நிர்வாக உரிமையை தட்டிச்சென்றது.
அகமதாபாத், ஜெய்ப்பூர்,லக்னௌ, மங்களூர், திருவனந்தபுரம் ஆகிய ஐந்து விமான நிலையங்கள் அதானி வசம் சென்றன. குவாஹத்தி விமான நிலையம் வேறு நிறுவனத்திற்கு சென்று விட்டது.
அதானி நிறுவனம் விமான நிலைய நிர்வாகத்தில் முன் அனுபவம் கொண்டது இல்லை.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது திருவனந்தபுரம் விமான நிலையத்தை பொருத்தவரை கேரள அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு மாறாக இந்த ஏலம் விடப் பட்டிருப்பதால் நாங்கள் அதானிக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்ததுடன் வழக்கும் போட்டிருப்பதாக தெரிகிறது.
விமான நிலையத்திற்கென கேரள அரசு முதலில் 635 ஏக்கர் நிலத்தையும் பின்னர் சர்வதேச முனையம் கட்டட மேலும் 23.57 ஏக்கரும் இலவசமாக தந்திருக்கிறது. அப்போது ஏற்பட்ட ஒப்பந்ததில்தான் பின்னால் ஏதாவது கம்பெனிக்கு விமான நிலைய நிர்வாகம் தரப்பட்டால் அதில் கேரள அரசையும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் நிலத்தின் விலைக்கு அரசையும் ஒரு பங்குதாரர் ஆக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கிறது.
எந்த ஒப்பந்தத்தையும் பின்பற்றாமல் இப்போது தனியார் வசம் அதுவும் குறிப்பாக அடானி வசம் விமான நிலைய நிர்வாகத்தை ஒப்படைப்பதை ஏற்க முடியாது என்று தெளிவாக பினராய் விஜயன் குறிப்பிட்டுள்ளார்.
அனுபவம் என்ற நிபந்தனை எதுவும் ஏலம் தொடர்பான வரையறைகளில் இல்லாததால்தான் அதானி குழுமத்திற்கு தேர்வு செய்யப் படும் வாய்ப்பு கிடைத்தது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
அதானி குழுமம் இன்று கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள் வணிகத்தில். அது அவர்களது உரிமையாக இருக்கலாம்.
அதற்காக மாநில அரசு ஒன்று வஞ்சிக்கப்படவேண்டுமா?
மத்திய பாஜக அரசு பெரு நிறுவனங்களின் அரசு என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா இல்லையா??!!