ரெயில்வே பணிகளுக்கு ஆட்கள் எடுக்கும் போது வடமாநிலத்தவர் தென்னக மாநிலங்களை ஆக்கிரமித்து விடுகிறார்கள் என்பது சில ஆண்டுகளாக இருக்கும் கொதிப்படைய வைக்கும் புகார்.
பொதுமேடை முன்பே இதுபற்றி எழுதியிருக்கிறது.
தமிழ் தெரியாததால் ரெயில்வே ஸ்டேஷனில் பச்சைக் கொடி காட்ட வேண்டிய கார்டு தவறாக காட்டியதால் இரண்டு ரயில்கள் மோதிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவானது நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்டது. அதனால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காக்கப்பட்டன. எனவே தமிழகத்தில் பணி செய்ய தமிழ் மொழி அறிவு தேவை என அறியப்பட்டது. ஆனால் ரெயில்வேயில் உள்ளவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்றால் முழுதாக இந்திக்காரர்கள் இருந்தால் மொழிப் பிரச்னை வராதல்லவா என்று தமிழர்களை ஒழித்துக்கட்டும் வேலையில் தீவிரம் காட்டினார்கள்.
மோசடி இல்லையென்றால் ஹரியானாவில் உள்ளவன் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி வாய்ப்பை பெற்றிருப்பானா? தேர்ச்சி என்பது கண் துடைப்பு என்று தெரிகிறது அல்லவா?
கண்டனம் எழுந்த பிறகு இப்போது பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் 510 அப்ரண்டிஸ் பணிக்கான பணியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தமிழ் நாட்டில் அனைத்து வேலை வாய்ப்பு பதிவு அலுவலங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வரவேற்கத் தக்கது என்றாலும் இதிலும் ஏதாகிலும் சூழ்ச்சி இருக்கிறதா என்பதையும் ஆராய வேண்டும்.
தமிழகத்தில் வட மாநிலத்தவர் முன்கூட்டியே பதிவு செய்து வைத்திருப்பதற்கு வாய்ப்பு குறைவு என்பதை மறுக்க முடியாது.
ஏன் அதற்கு நேரிடையாக தமிழகத்தில் குடி இருப்போர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்தால் என்ன?
தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை செல்லாதது ஆக்க தமிழ் தெரியும் என்று சான்றிதழ் போலியாக பெறுபவர்கள் என்ன செய்ய மாட்டார்கள்?
ரெயில்வே துறை மட்டுமல்ல தமிழகத்தில் செயல்படும் எந்த மத்திய அரசு அலுவலகமாக இருந்தாலும் உள்ளூர் மக்களுக்கு வேலையில் முன்னுரிமை என்பதே சட்டமாக இருக்க வேண்டும். அதற்கு உருவகம் கொடுக்க முனைவதே நல்லது.
கண்டனங்களை தவிர்க்கும் முயற்சியாக இல்லாமல் உண்மையாகவே அமுல்படுத்தினால் வரவேற்க வேண்டிய அறிவிப்பு இது.
This website uses cookies.