மூன்று சமஸ்கிருத நிகர் நிலை பல்கலை கழகங்களை மத்திய அரசின் பல்கலை கழகங்களாக மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது.
ஏன் சமஸ்கிரிததுக்கு மட்டும் மத்திய அரசு பரிவு காட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்?
எட்டாம் அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆதரிக்க வேண்டும். செம்மொழி என்றால் தமிழ் உள்ளிட்ட அனைத்து செம்மொழிகளுக்கும் நிதி ஒதுக்கி ஆதரிக்க வேண்டும்?
ஆட்சி உங்கள் கையில் இருப்பதால் மொழிகளுக்கு இடையே பாரபட்சம் காட்டும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா?
பாராளுமன்றத்தில் பாஜக உறுப்பினர் கணேஷ் சிங் சமஸ்கிருதம் பேசினால் நீரிழிவு வராது என்று பேசுகிறார். ஆதாரம் கேட்டாம் அமெரிக்காவில் ஒரு கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் இது கண்டறியப் பட்டுள்ளது என்கிறார். உலகின் சில இஸ்லாமிய மொழிகள் உள்பட 97 சதவீத மொழிகள் சமஸ்கிருத அடிப்படை கொண்டவைகள் என்கிறார்.
விவாதத்தில் அமைச்சர் பிரதாப சந்திர சாரங்கி சமஸ்கிரிததில் பேசுகிறார். இந்த வெறி எங்கு கொண்டு போய்விடும்?
கடைசியில் மத்திய சமஸ்கிருத பல்கலை கழகங்கள் அமைக்க வகை செய்யும் மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது.
சமஸ்கிருத மொழிக்கு ஊக்கம் கொடுப்பதை நியாயப் படுத்த வேண்டும் என்றால் அனைத்து மொழிகளையும் சமமாக பாவித்து அனைத்துக்கும் அதே சலுகைகளை கொடுக்க வேண்டும்.
இப்படி பாரபட்சம் காட்டுவதன் மூலம் வெறுப்புதான் வளரும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் வெறுப்பு எங்களை என்ன செய்யும் என்று மமதையுடன் செயல்பட்டால் அதன் விளைவுகள் உங்களுக்கே ஊறு விளைவிப்பதா கத்தான் அமையும்.