செப்டம்பர் 14 – அரசியல் சாசன சபை இந்தியை இந்தியாவின் ஆட்சிமொழியாக ஏற்றுக் கொண்ட நாள். அதை கொண்டாடுவது இந்தி தினம். இன்று பேசிய பாஜக தலைவர் அமித் ஷா தன் கட்சியின் உண்மை முகத்தை காட்டினார்.
‘இந்திக்குத்தான் இந்தியாவை இணைக்கும் வல்லமை உண்டு.’
‘உலகத்தின் முன் இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்த இந்தியாழ் மட்டுமே முடியும்.’
‘இந்தி இந்தியாவின் அடிப்படை மொழி’
‘இந்தியாவின் அடையாளமாக இந்தியே ஆக வேண்டும்.’
‘வல்லபாய் படேல், மகாத்மா காந்தியின் கனவு இந்தியே இணைப்பு மொழி ஆக வேண்டும் என்பதே”
‘இந்தியயை புகுத்துவதில் பாதி வெற்றி மட்டுமே பெற்று இருக்கிறோம்.’
‘எனவே இந்தியர்கள் தங்கள் தாய் மொழியுடன் இந்தியையும் கற்றுக் கொண்டு பயன் படுத்த வேண்டும்.’ ‘
இவைதான் அமித் ஷா உதிர்த்த முத்துக்கள்.
ஒரு பொறுப்புள்ள மத்திய அமைச்சர் இப்படியா பேசுவார்.?
நாட்டின் மற்ற மொழி பேசும் சுமார் 70% மக்கள் வருந்துவார்கள் என்பது அவருக்கு தெரியாதா?
இந்தியா வலுவாக இருக்கிறது. ஒற்றுமையாக் இருக்கிறது. அதை குலைக்கும் வகையில் இருக்கிறது அமித் ஷாவின் பேச்சு.
1963ம் ஆண்டின் அரசு அலுவல் சட்டம் இந்தியையும் ஆங்கிலத்தையும் தகவல் பரிமாற்ற சாதனங்கள் ஆக அங்கீகரிக்கிறது.
ஒரு இந்தியை ஏற்றுக் கொண்ட மாநிலம் இந்தியை ஏற்றுக் கொள்ளாத மாநிலத்துக்கு தகவல் அனுப்பினால் இந்தியுடன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் சேர்த்து அனுப்ப வேண்டும் என்று சொல்கிறது. இந்தியில் ஏன் அனுப்ப வேண்டும்? ஆங்கிலத்தில் மட்டும் அனுப்பினால் போதாதா என்று யார் கேட்பது.? இந்தியில் அனுப்பும் போது ஆங்கில மொழி பெயர்ப்பையும் அனுப்புகிறீர்களா?
ஒரே நாடு ஓரே மொழி என்றால் மற்ற மொழிக்காரர்கள் எங்கே போவார்கள்?
இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தியை யார் மீதும் திணிக்க மாட்டோம் என்ற உறுதி மொழியை கொடுத்த ஜவஹர்லால் நேரு ஏன் அதை சட்டமாக்கி வருங்கால சந்ததியினருக்கு சட்ட பாதுகாப்பை வழங்க தவறினார்? பிற்காலத்தில் இந்தியை திணிக்க முயற்சிகள் நடக்கலாம் என்பது அவருக்கு தெரியாதா? நடக்கட்டும் என்பதுதான் அவரின் எண்ணமும் ஆக இருந்ததா? அதற்கு இடம் கொடுத்துதான் சட்டமாக்காமல் இருந்தாரா? அவரும் அந்த கூட்டத்தை சேர்ந்தவ்ர்தானே? அதை ஏற்றுக் கொண்டு அமைதியாக இருந்த நாம்தான் முட்டாள்கள் என்பதை இன்று அமித் ஷா நிருபித்து விட்டார்.
ஆங்கிலேயன் ஆட்சி செய்த போது ஆங்கிலத்தை கற்றவர்கள் இந்திக்கார்கள் ஆளும்போது இந்தியை கற்றுக் கொள்ள வேண்டியதுதானே என்கிறார்களா?
தமிழன் தலைவிதி எவனுக்காவது அடிமையாக வாழ்வதுதானா?
இது தமிழன் மீதான தாக்குதல் மட்டுமல்ல. இந்தி பேசாத அனைவர் மீதுமான தாக்குதல்.
அவர்கள் இந்தி திணிப்பை நிறுத்தப் போவதில்லை. எப்படி தடுப்பது என்று சிந்தித்து செயலாற்றுவது மட்டுமே இப்போது மற்றவர்களுக்கு இருக்கும் ஒரே வழி!
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜெவாலா இந்தி தான் எல்லாரையும் இணைக்கும் என்கிறார்.
இஸ்ரோ தலைவர் சிவன் உழைப்பால் உயர்ந்தவர். சந்தேகம் இல்லை. ஆனால் அவர் தான் தமிழர் என்று சொல்லிக் கொள்ளவே மறுக்கிறாரே? நான் இந்தியன் என்று சொல்லும் சிவன் பாராட்டுக்குரியவர். ஆனால் தமிழன் என்று சொல்ல மறுக்கும் சிவன்? இவரைப்போல விஞ்ஞானி ஆக வேண்டும் என்றால் தாய் மொழிப்பற்றை இனப்பற்றை கைவிட வேண்டும் என்பதா நிலைமை?
இந்திக்காரர்கள் உட்பட மற்ற மாநிலத்துக்காரர்கள் தங்கள் அடையாளங்களை விட்டு விடுகிறார்களா?
சாதி மத அடையாளங்களை சட்டப்படி ஒழிப்பார்களா?
அவர்கள் மட்டும் தங்கள் அடையாளங்களை விட மாட்டார்கள. மற்றவர்கள் விட வேண்டும் என்பது எப்படி நியாயம்?
இது நல்லதற்கல்ல??!!