ஐஐடி யில் மோடி; போற்றுவது தமிழை! நிகழ்ச்சி தொடங்குவது சமஸ்கிருதத்தில்?

modi
modi

சென்னை ஐஐடி-யில் பட்டமளிப்பு விழாவுக்கு பிரதமர் மோடி வந்திருந்தார்.

விமான நிலையத்தில் வரவேற்பில் தமிழ் மொழியில் தொன்மை பற்றி தான் அமெரிக்காவில் பேசியதை நினைவு கூர்ந்தார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனார் பாடலை ஐநாவில் நமது நாட்டு  பிரதமர் ஒலித்த போது நமக்கு பெருமையாகத்தான் இருந்தது. பிரதமருக்கு நன்றி.

இதேபோல் வாஜ்பாயும் பலமுறை தமிழ் பாடல்களை நினைவு கூர்ந்திருக்கிறார். அவர் கவிஞர். அவரது தமிழ் நேசம் போலியானதாக யாரும் குற்றம் சாட்டியதில்லை.

ஆனால் மோடி தமிழை உயர்த்தும் போது மட்டும் சிலர் ஐயம் எழுப்புகிறார்கள்.

தமிழை உயர்த்தினால் போதுமா? தமிழை வாழ வைக்க வேண்டாமா? அலுவல் மொழியாக வாழ வைக்க வேண்டாமா? மாநிலத்திலும் மத்தியிலும்.

இது உதட்டளவில் ஆன வாழ்த்தா? மயங்க வைத்து மிதிக்கும் நோக்கம் கொண்டதா என்று மோடியை மட்டும் கேட்பதில் அர்த்தம் இருக்கிறதா இல்லையா?

ஏன் இந்த கேள்வியை வாஜ்பாயியை நோக்கி கேட்டதில்லை யாரும்?

மோடி அவ்வளவு புகழ்ந்து தமிழை பேசியபிறகு அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி சமஸ்கிருத பாடலுடன் தொடங்குகிறது என்றால் அது அவரின் கட்டுப்பாட்டில் இல்லையா?

தமிழ்நாட்டில் ஐஐடி இருந்தால் தமிழ்த் தாய் வாழ்த்து பாடக் கூடாது என்று ஏதாவது சட்டமா?

இதே நிலை பிரதமர் தமிழ்நாட்டில் கலந்து கொள்ளும் எல்லா நிகழ்ச்சிகளிலும் தொடர்கிறதே காரணம் என்ன?

இவர்களை எப்படி நம்புவது?