ஆர் பி எப்; சுற்றறிக்கைகள் இந்தியில் மட்டுமாம்?! இவர்கள் திருந்தவே மாட்டார்களா??!!

rpf
rpf

ரெயில்வே பாதுகாப்பு படை துணை ராணுவ அந்தஸ்து பெற்றது. அதில் எல்லா மொழிக்காரர்களும் வேலை செய்கிறார்கள்.

அவர்களுக்கு இனிமேல் இந்தியில் மட்டுமே அறிவுரைகள், உத்தரவுகள் அனைத்தும் தெரிவிக்கப்படும்.

இந்தி தெரியாதவர்களுக்கு இந்தி தெரிந்தவர்கள் மொழிபெயர்த்து அவர்களுக்கு தெரிவிக்க வேண்டுமாம்.

இதைவிட கொடுமை வேறு ஏதாவது இருக்க முடியுமா?

கடைநிலையில் இருந்து உயர்நிலை வரை பலர் வேலை செய்து வருகிறார்கள். எல்லாருக்கும் இந்தி தெரியாது. ஏன் ஆங்கிலத்தில் மட்டுமே என்றால் கூட சிலருக்குத்தான் தெரியும்.

தமிழ், தெலுங்கு, மராட்டி மட்டுமே தெரிந்தவர்கள் அர் பி எப்பில் வேலை பார்க்கக் கூடாதா? வேலை பார்க்க வேண்டுமென்றால் இந்தி கற்றுக் கொள் என்று தானே சொல்கிறார்கள்?

எத்தனையோ முறை இதுபோல் இந்தியை திணிக்க முயன்று எதிர்ப்பு கிளம்பியவுடன் அதை திரும்ப பெற்றுக் கொள்வதாக சொல்வது வாடிக்கை ஆகி விட்டது.

ஏதாவது ஒரு நேரத்தில் எதிர்ப்பு குறைந்த நேரத்தில் இந்தி மட்டும் என்பதையே இறுதி ஆக்கி விடுவார்கள்.

எல்லாவற்றையும் நீதிமன்றம் சென்றுதான் நியாயம் பெற வேண்டும் என்பது அன்னியர் ஆட்சியில் வேண்டுமானால் வாடிக்கையாக இருக்கலாம்.

சொந்த நாட்டில் ஒரு அரசு தன் குடிமக்களை இப்படி இரண்டாம் தர குடிமக்களாக கொடுமைப்படுத்தக் கூடாது.

தெரியாமல் செய்தால் மன்னிக்கலாம். தெரிந்தே செய்பவர்களை என்ன செய்வது?

உடனே இந்த உத்தரவை  திரும்ப பெற்று தமிழ் உள்ளிட்ட எல்லா மொழிகளிலும் சுற்றறிக்கைகளை அனுப்ப ரெயில்வே துறை  நடவடிக்கை எடுக்க வேண்டும்.