தமிழ் நடிகர்கள் சங்கமாக பெயர் மாற்றம் செய்யாமல் விஷால் வந்தாலென்ன, ஐசரி கணேஷ் வந்தாலென்ன?!!

nadigar-sangam-election
nadigar-sangam-election

ஆந்திர, மலையாள, கன்னட நடிகர் சங்கங்கள் எல்லாம் தங்கள் மாநில பெயர்களையே கொண்டிருக்க இங்கு மட்டும் எதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயர்?

இதுவே தமிழர்களுக்கு அவமானம்.

பாரதிராஜா அவ்வப்போது குரல் கொடுக்கிறார். அதனை மறுப்போரும் இல்லை.  முயற்சிப்போரும் இல்லை.

இத்தனைக்கும் தமிழ் சினிமாவில் வேற்று மொழிக்காரர்களின் ஆதிக்கம்தான் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

தமிழ்நாட்டு கதாநாயகர்களையும் கதாநாயகிகளையும் விரல் விட்டு எண்ணி  விடலாம்.

இதற்குமா இட ஒதுக்கீடு என்றால் ஏன் கூடாது என்பதே பதில்.

32 கோடி பட்ஜெட்டில் கட்ட வேண்டிய கட்டடத்திற்கு 18 கோடி செலவு செய்து விட்டு  மீதி 20 கோடி தேவை என்று அறிவித்து புது நிர்வாகிகளை தேர்ந்தேடுக்க ஒரு பொதுத்தேர்தலை விட மக்கள் கவனத்தை திருப்பி தமிழ்நாட்டையே திரும்ப பார்க்க வைத்து தேர்தல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் நடிகர் சங்கத்தினர்.

இதில் சாதி, அரசியல், பணம் என்று எல்லாம் விளையாடுகிறது.

ஒன்று மட்டும் இல்லை. நேர்மை !!!

அது இரு தரப்பிடமும் இருந்திருந்தால் உட்கார்ந்து பேசி தேர்தல் நடைமுறையை நியாயமாக உருவாக்கி இருப்பார்கள். ஒருவரை ஒருவர் விழுங்கப் பார்ப்பதால் எழுந்த போட்டி இது..

சரி. வலு உள்ளவர்கள் வெற்றி பெற்று வாருங்கள்.

யார் வந்தாலும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ் நடிகர்கள் சங்கம் என்றோ தமிழ்நாட்டு நடிகர்கள் சங்கம் என்றோ பெயர் மாற்றம் செய்து இந்த மண்ணுக்கு விசுவாசம் காட்டுங்கள்.

வெகு மக்கள் குரல் கொடுத்தால்தான் மாற்றுவீர்களா??!!