புதிதாக தேர்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பில் மதமும் மொழிகளும் போட்டி போட்டன.
தொடங்கியது பாஜக. எல்லாரும் ஜெய் ஸ்ரீராம் முழக்கத்துடன் பதவி ஏற்றனர்.
வேண்டும் என்றே எம்ஐஎம்எம்பி ஒவைசி பதவி ஏற்க வரும்போது ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்கி வெறுப்பேற்றினர். வரும் பதிலுக்கு ஜெய் பீம், அல்லாஹோ அக்பர், ஜெய் ஹிந்த் என்று குரல் எழுப்பினார்.
எல்லா தமிழ் உறுப்பினர்களும் தமிழிலேயே பதவி ஏற்றுக் கொண்டனர். எல்லாரும் இனி பாராளுமன்றத்தில் தமிழிலேயே பேச வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டால் நல்லது.
அதற்கு சில விதிகள் உள்ளன. அதன்படி முன்னயே அறிவிப்பு கொடுத்து விட்டால் தமிழில் பேசினால் மொழி பெயர்ப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கும். எனவே தமிழிலேயே பேசலாம். எல்லா மாநில உறுப்பினர்களும் அவரவர் தாய் மொழியில் பேசினால்தான் வடக்கே உள்ளவர்களுக்கு கொஞ்சமாவது நல்லறிவு பிறக்கும்.
இந்தி வேண்டாம் என்று சொல்வதை விட ஏன் என் தாய் மொழி கூடாது என்று கேட்டால் யாரிடம் பதில் இருக்கும்?
ஆங்கில எதிர்ப்பு என்பது உண்மையில் இந்தி திணிப்பே என்றாலும் ஏன் விடுதலை ஆன நாட்டில் வேற்றுநாட்டு மொழியை பேச வேண்டும் என்று கேட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. எனவே இந்தியும் வேண்டாம், ஆங்கிலமும் வேண்டாம். என் தாய் மொழி எனக்கு போதும் என்று முடிவு எடுத்து செயல்பட்டால் பிரச்னை தீரும்.
சாத்வி பிரக்யா மகராஜ் பதவி ஏற்கும் போது தன் குருநாதரை போற்றினார். சலசலப்பையும் பொருட்படுத்தாது தன் போக்கில் பேசினார்.
மேற்கு வங்க உறுப்பினர்கள் ஜெய் பங்க்ளா முழக்கமும், ஜெய் மா துர்கா என்றும் பெரும்பாலான தமிழ் உறுப்பினர்கள் தமிழ் வாழ்க என்றும், பெரியார் வாழ்க என்றும், அம்பேத்கர் வாழ்க என்றும் முழக்கம் இட்டனர்.
எல்லாரும் தமிழிலேயே பதவி ஏற்றுக் கொண்டனர்.
ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டும் தமிழ் வாழ்க என்று சொல்லிவிட்டு ஜைஹிந்த் வந்தேமாதரம் என்று குரல் எழுப்பினார்.
எப்போது இவர் அகில இந்தியாவுக்கு மாறினார் என்பது தெரியவில்லை. இனி அதிமுக கூட்டங்களில் எல்லாம் இதே முழக்கம் முழங்குமா என்பதும் தெரியவில்லை.
குறைந்த பட்சம் அன்னை பாரதம் என்றாவது முழங்கி இருக்கலாம்.
என் தாய் நாட்டை என் தாய் மொழியில் மட்டுமே வாழ்த்தி முழக்கம் இட வேண்டும். வேறு மொழியில் வாழ்த்தினால் அது என் தாய் நாடாக இருக்க முடியாது.
பாரதியார் கூட வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு என்றுதான் முழக்கம் எழுப்பினார்.
இனி வரும் காலம் எப்படி இருக்கும் என்று இன்றைய பதவி ஏற்பிலேயே தெரிந்து விட்டது.
நாடு மொழியாலும் மதத்தாலும் பிரிந்து கிடக்கிறது என்பதை விட பல மொழிகளையும் பல மதங்களையும் கொண்டிருந்தாலும் ஒரே நாடாக விளங்கி வருகிறது என்பதே நமக்கு பெருமை.
அதை விடுத்து எந்த ஒரு மொழியையோ மதத்தையோ எவர் மீதும் திணித்தால் நாட்டில் அமைதி நிலவாது என்பதை பாராளுமன்ற பதவி ஏற்பு நிகழ்ச்சிகள் நிருபித்துவிட்டன.