திருவள்ளுவர் சிலைக்கு பிள்ளையார்பட்டியில் அதிகாலை நேரத்தில் சில கயவர்கள் சாணத்தை வீசி அவமரியாதை செய்திருக்கிறார்கள்.
எல்லாரும் கண்டனக் குரல் எழுப்பி விட்டார்கள். கட்சி மாச்சரியங்களை கடந்து எதிர்ப்புக் குரல் வலுத்த நிலையில் அதிமுக மட்டும் செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வனை விட்டு கண்டனம் தெரிவித்து இருக்கிறது.
கட்சி சார்பில் அதிமுக கண்டனம் தெரிவித்து இருக்கிறது என்றாலும் ஆட்சியாளர்கள் தரப்பில் அரசு சார்பில் என்ன நடவடிக்கை என்று விளக்கம் தர வேண்டாமா?
திருவள்ளுவர் உருவப் படத்திற்கு பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் காவி உடை உடுத்தி விபூதி பூசி அவமரியாதை செய்ததை அனைவரும் கண்டித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை என்றால் இதற்குப் பின்னால் காவி சக்திகள் இருக்கின்றனவா என்ற கேள்வி இயல்பாக எழத்தானே செய்யும். இதை தெளிவு படுத்த வேண்டிய நிலையில் இருப்பது காவல் துறை.
சிலைகளை அவமரியாதை செய்யும் முட்டாள்தனம் பெரியார், அம்பேத்கார், தேவர் அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கும் அவ்வப்போது நிகழ்வது வழக்கம்.
இப்படி செய்வதனால் அவர்களின் புகழ் ஓங்குமே தவிர மங்காது.
இப்போது டிஜிபி சிலையை அவமதித்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டிருக்கிறார். அவர்கள் மீது நான்கு பிரிவுகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் குற்றவாளிகளின் சிசிடிவி காட்சிகள் கிடைத்திருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். எனவே குற்றவாளிகள் பிடிபடுவது உறுதி.
உண்மை வெளிவரும் என நம்புகிறோம்.