மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் இல்லை – பிடித்த மொழியை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்ததை வைத்து இந்தி திணிப்பு அச்சம் அகன்று விட்டதை போல் சிலர் பிரச்சாரம் செய்வதை சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
இந்தி பேசாத மாநிலங்களில் யாரும் தங்கள் தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து பக்கத்து மாநில மொழிகளில் ஒன்றையோ வேறு மாநில மொழியையோ பிரெஞ்சு அல்லது ஜெர்மனையோ தேர்ந்தெடுக்கப் போவதில்லை.
அவர்கள் மூன்றாவது மொழி ஒன்று கட்டாயம் என்றால் வேறு வழியின்றி இந்தியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டே தீரும். இது திணிப்பல்லாமல் வேறென்ன?
அதனால்தான் வஞ்சகத்தனமாக எல்லாரும் தங்கள் தாய்மொழி, ஆங்கிலம் அல்லாமல் வேறு ஒரு மொழியை கற்றே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.
மூன்றாவது மொழி ஒன்றை கற்க வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக கஸ்தூரிரங்கன் தெளிவு பட கூறுகிறார்.
நேரடியாக இந்தியை படியுங்கள் என்று கூறுவதற்கு பதிலாக வேறு வழியின்றி இந்தியை தேர்ந்தெடுக்க கட்டாயப்படுத்துகிறார்கள்.
ஒரு இனத்தை அழிக்க அவன் மொழியை அழித்தால் போதும் என்பதை உணர்ந்து தமிழர்களை ஒழிக்க அவர்களின் மொழியை ஒழிக்க திட்டமிடுகிறார்கள்.
ஏனப்பா மூன்றாவது மொழியை திணிக்கிறாய் என்றால் உங்கள் மீது உள்ள அக்கறை என்பார்கள்.
எந்த இந்திக்காரன் இந்தி ஆங்கிலத்தை தவிர மூன்றாவது மொழியாக தமிழையோ அசாம் மொழியையோ தேர்ந்தேடுக்கப் போகிறான்?
எத்தனை நாடுகளில் மூன்று மொழியைக் கற்பிக்கிறார்கள்?
இங்கே உள்ள சோடா பாட்டில் புகழ் வில்லிபுத்தூர் ஜீயர் எல்லோரும் எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
அது எப்படி எல்லா பார்ப்பனர்களும் மும்மொழி திட்டத்தை ஆதரிக்கிறார்கள்?
சமச்கிரித வேதத்தை கற்றுக் கொண்டால் சூத்திரன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றவேண்டும் என்றும் பேசினால் நாவை அறுக்க வேண்டும் என்றும் எழுதி வைத்தவர்கள் இப்போது விழுந்து விழுந்து இந்தியை கற்றுக் கொள்ளுங்கள் என்று கதறுவது ஏன்?
இன்னும் தமிழில் கையெழுத்து கூட போட தெரியாமல் இருக்கும் தமிழர்கள் மத்தியில் நீ மூன்று மொழிகளை கற்றுக்கொள் என்று சொல்வது எவ்வளவு அபத்தம். சாதாரண மனிதனுக்கு இல்லை மாணவர்களுக்கு மட்டுமே இந்த தண்டனை என்றால் ஏன் அவர்களுக்கு இந்த தண்டனை என்று எங்களுக்கு தெரிய வேண்டாமா?
வேலை கிடைக்காமல் இங்கே வந்து வேலை பார்க்கும் இந்திக்காரர்கள் எல்லாம் இப்போது தமிழை கற்றுக் கொள்ளவில்லையா?
அதேபோல் இங்கிருந்து மும்பைக்கும் கொல்கத்தாவிற்கும் டெல்லிக்கும் சென்று வேலை செய்யும் தமிழர்கள் எங்கும் படிக்காமலேயே மராத்தியையும் வங்காளியையும் இந்தியையும் சரளமாக பேசுகிறார்களே என்ன குறை?
இதுவரை இந்தி கற்காமல் படித்து பட்டம் பெற்று பணியில் உள்ளவர்கள் எதில் குறைந்துவிட்டார்கள்?
பட்ட படிப்பை நான்கு ஆண்டுகளாக மாற்றி ஒவ்வொரு ஆண்டும் நிறுத்தி நிறுத்தி படிக்க வழிவகை செய்திருக்கிறார்கள். அதை பரிசீலிக்கலாம்.
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றி எந்த மொழியில் என்ன பயில வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று விட்டு விடுங்களேன். ஏன் கட்டாயப்படுத்துகிறீர்கள்?
ஒரே பாடத்திட்டத்தை நாடு முழுதும் அமுல்படுத்த முடியாமல் பல பாடத் திட்டங்களை வைத்துக்கொண்டு அதில் மாநில பாடத்திட்ட மாணவர்களை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் என்று நீட் தேர்வு நடத்தும் இவர்களிடம் என்ன நியாயத்தைப் எதிர்பார்க்க முடியும்? உச்ச நீதிமன்றம் இன்னும் இதுபற்றி இறுதி முடிவு கொடுக்கவில்லை என்பதை மறக்க வேண்டாம்.
பத்து வயது குழந்தைகளுக்கு படிக்கும் பளுவை அளவுக்கு அதிகமாக திணிப்பது ஏன்? படிக்கும் பளு எல்லா மொழி மாணவர்களுக்கும் சரி சமமாக இருக்க வேண்டும். அது மும்மொழி திட்டத்தில் முடியவே முடியாது. ஏன் இந்த பாரபட்சம். ?
கல்வி கற்பதை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுவோம் என்று சொல்லால் சொல்லிவிட்டு செயலால் கொடுமைப்படுத்தி அடிமைப்படுத்தும் திட்டம்தான் மும்மொழித்திட்டம்.
எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்டதாக கூறுவதே தவறு.
இப்போது வங்காளம், மராட்டியம் கன்னடம் போன்ற மாநிலங்களும் மும்மொழித் திட்டத்தை எதிர்க்க தொடங்கிவிட்டன.
தாய்மொழிக் கல்வியை கட்டாயப்படுத்தினால் நல்லதுதானே ஏன் அதற்கு மாநில அரசுகள் திட்டமிடக் கூடாது?
சிபிஎஸ்இ பள்ளிகள் தடை செய்யப்பட்டால் கூட நல்லதுதான்.
இந்தி படிக்க விரும்புபவர்களுக்கு இந்தி பிரசார சபா தனது சேவையை விரிவு படுத்தட்டுமே.