பார்ப்பனச்சேரி அக்கிரகாரம்
கவிப்பேரரசு வைரமுத்து தனது தமிழாற்றுப்படை வரிசையில் கபிலர் குறிஞ்சி ஆணடவர் என்ற தலைப்பில் உரையாற்றினார். நக்கீரன் மட்டுமே அதை முழுவதும் வெளியிட்டது.
சங்க கால புலவரான கபிலர் மட்டுமல்ல தொல்காப்பியர் முதல் இன்னும் பல்வேறு புகழ் பெற்ற புலவர பெருமக்கள் பார்ப்பனர் குலத்திலே பிறந்தவர்கள் ஆக இருந்திருகிறார்கள்.
ஆனாலும் சங்க கால தமிழ் இலக்கியங்களில் அவர்களது பங்கு குறிப்பிடத் தக்க இடத்தில இருந்தது.
சாதி இல்லாத சமுதாயம் ஆக தமிழ் சமுதாயம் விளங்கி வந்த காலத்தில் பார்ப்பனர் மட்டும் எங்கே இருந்து வந்தார்கள்.? ஏனென்றால் பார்ப்பனர்களோடு பிணைந்தது வர்ண தர்மம். வர்ண தர்மத்தோடு பிணைந்தது சம்ச்க்ரிதம். அதற்கும் தமிழர்களுக்கும் தொடர்பு இல்லை. பின் எப்போது எப்படி வர்ண தர்மம் தமிழர் வாழ்வில் புகுந்தது.? எப்போது சமஸ்க்ரிதம் தமிழில் கலப்பு செய்ய தொடங்கியது? எந்த அரசர் அதற்கு இடம் கொடுத்தார்? ஏனென்றால் அரச ஆதரவு இல்லாமல் தூய தமிழில் சமஸ்க்ரித்த கலப்பு செய்தல் இயலாது.
நட்புக்கு சான்றாக வேள்பாரி-கபிலர் நட்பு வைரமுத்துவால் எடுத்துக் காட்டப் பட்டிருகிறது.
மன்னர் பாரி போரில் கொல்லப்பட்டபிறகு அவரது மகள்கள் இருவரையும் பிற மன்னர்கள் ஏற்றக் கொள்ளாத நிலையில் அவர்களை பார்ப்பனசேரியில் விடுத்து அவர் வடக்கிருந்து உயிர் நீத்தார் என்று வரலாறு பேசுவதாக வைரமுத்து குறிப்பிடுகிறார்.
ஆக பார்ப்பனர்கள் வாழ்ந்த இடமும் கூட சேரி என்றுதான் அழைக்கப் பட்டிருக்கிறது. ஆதாரம் இல்லாமல் வைரமுத்து எழுதி இருக்க மாட்டார்.
இதுவரை தாழ்த்தப்பட்டோர் வாழும் இடம் தான் ஊரை விட்டு ஒதுக்கிய இடத்தில் அமைக்கப் பட்டு சேரி என்று அழைக்கப் பட்டது என்று கேள்விப் பட்டிருக்கிறோம்.
பார்ப்பனர்கள் வாழ்ந்த இடமும் சேரி என்று தான் அழைக்கப் பட்டது என்றால் அது அக்கிரகாரம் ஆனது எப்போது? எப்படி?
தமிழர்கள் வரலாறு மறைக்கப் பட்ட வரலாறாகவே இருக்கிறது. களப்பிரர் காலம் ஏன் இருண்ட காலம் என்று அழைக்கப் படுகிறது?. அவர்கள் பார்ப்பனர்கள் ஆதிக்கத்தை ஏற்காததாலா ?
தூய தமிழ் யார் காலத்தில் சமஸ்த்தமிழ் ஆயிற்று?
விடை தேடக் கூட முயற்சி இல்லையே?
எது எப்படியோ பார்ப்பனர்கள் தமிழர்களோடு வர்ண தர்மத்தையும் சமஸ்க்ரிததையும் திணிக்காமல் வாழ்ந்து தூய தமிழ்ப் புலவர்களாக சேரியில் வாழ்ந்து தமிழர்களோடு இணைந்து வாழ்ந்த காலமும் ஒன்று இருந்திருக்கிறதே என்று நினைக்கையிலே எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகிறது.
அந்த நாள் மீண்டும் வருமா என்ற கேள்வியும் உடன் வருகிறதா இல்லையா?