மொழி

ஆங்கிலப் பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் ஆவது எப்போது?

Share

தமிழ்நாடு என்பதை டமில் நாடு என்றுதான் ஆங்கிலத்தில் எழுதுகிறோம்.

நமது தமிழ் கலாச்சார துறை அமைச்சர் பாண்டியராஜன் மாநில அளவிலான கமிட்டி ஒன்று இது பற்றி ஆராய்ந்து ஏறத்தாழ 7,000 ஆங்கிலப் படுத்தப்பட்ட பெயர்களை தமிழாக ஆக்கி அறிவிப்போம் என்றார்கள்.

ஆனால் அது எப்போது முடிவுக்கு வரும் என்பதும் இப்போதைய நிலை என்பதும் தெரியப் படுத்தப்படவில்லை.

சீனாவிலும் மியான்மரிலும் இன்னும் பல ஆசிய நாடுகளிலும் ஆங்கிலப்படுத்தப்பட்ட பெயர்களை தங்கள் மொழிகளில் மாற்றி கொண்டார்கள்.

ஆங்கிலேயன் வாயில் நுழையவில்லை என்பதற்காக நமது மொழியை காவு  கொடுத்துக் கொண்டிருந்தோம். விடுதலை பெற்ற பின்னும் அதிலேயே தொங்கிக் கொண்டிருக்க வேண்டுமா?

கொள்ளிடம் என்பதை ஆங்கிலத்தில் கொல்ரூன் ( Coleroon ) என்று எழுத வேண்டிய அவசியம் என்ன?

மாற்று மொழியை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டின் பெயரை மட்டுமல்ல அதன் இன்றியமையாத அம்சங்களை தமிழ் மொழியிலேயே தெரிந்து கொள்ள வேண்டும். பயன்படுத்த வேண்டும். அதுதான் அந்த மொழி சார்ந்த மக்களின் உரிமை.

மற்ற மொழிகளில் இல்லாத ‘ழ’  என்ற அழகிய சொல்லை அதன் உச்சரிப்பை நாம் ஏன் கைவிட வேண்டும் அல்லது பலிகொடுக்க வேண்டும்?

இது ஒரு பிரச்னையா என்று திசை திருப்பி அதன் முக்கியத்துவத்தை குறைக்க முயற்சிக்கிறார்கள். அரசு இடம் கொடுத்து விடக் கூடாது.

நீதிமன்ற மொழியாக உயர் நீதிமன்றம் வரையாவது இப்போதைக்கு நிறைவேற்றியே ஆக வேண்டும். இறுதியாக உச்சநீதி மன்றத்திலும் எல்லா இந்திய மொழிகளும் ஆட்சி மொழிகள் ஆக வேண்டும்.

எப்படி என்று  கேட்டு குழப்பக் கூடாது. மக்களுக்காக நீதிமன்றமா? நீதிமன்றத்திற்காக மக்களா?

வேற்று மொழியில் நீதி வழங்கும் நாட்டை எப்படி நம் நாடு என்று ஏற்றுக் கொள்வது?

பாராளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும்  என்றைக்கு எட்டாவது அட்டவணையில் கண்ட அத்தனை மொழிகளும் ஆட்சி மொழி ஆகின்றனவோ அன்றுதான் உண்மையான சுதந்திரம்.   

அதுவரை மற்றவர்கள் இரண்டாம் தரக் குடிகள்தான்.

This website uses cookies.