ஆர் எஸ் எஸ் தலைவர்கள் நேரிடையாக எதையும் கூற மாட்டார்கள்.
நோக்கம் இந்தி திணிப்பு என்றால் அதை நேரிடையாக கூறினால் இந்தி பேசாதவர்களின் எதிர்ப்பு வரும். எனவே அதற்கு மாறாக ஆங்கிலம் கூடாது என்பார்கள். ஏனென்றால் ஆங்கிலம் இல்லாமல் இருந்தால்தான் அந்த இடத்தை இந்தி பிடிக்க முடியும். ஆங்கிலம் தொடர்பு மொழியாக நீடிக்கும் வரை இந்தியோ வேறு மொழிகளோ அந்த இடத்தை பிடிக்கவே முடியாது. எனவேதான் அந்நியமொழி இன்னமும் தேவையா என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
அந்த வகையில்தான் மோகன் பகவத் சமீபத்தில் இதே கருத்தை கூறியிருக்கிறார். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அந்நிய மொழியில் அலுவலக உத்தரவுகளை எழுதிக் கொண்டிருப்பீர்கள்? ஏன் நீங்கள் உள்ளூர் மொழியில் எழுதக்கூடாது? இதுதான் அவர் வைத்த கேள்வி.
உள்ளூர் மொழி என்றால் அவருக்கு இந்தி.
அதாவது மறைமுகமாக இனிமேல் இந்தியில் அலுவலக உத்தரவுகளை எழுதுங்கள் என்கிறார். ஆங்கிலம் எத்தனை பேருக்கு தெரியும் என்று கேட்கும் பகவத் எத்தனை பேருக்கு இந்தி தெரியும் என்று கேட்க மாட்டார்.
அதேபோல் இந்தி பேசாத மாநிலமக்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் நீங்களும் இந்தியில் எழுதுங்கள் என்பார். இந்தி எங்களுக்கு அன்னியமாயிற்றே என்றால் ஆங்கிலமும் அன்னியம்தானே என்பார். ஆனால் நாங்கள் ஏன் இரண்டு அந்நிய மொழிகளை கற்க வேண்டும் என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டார். ஏனென்றால் அதற்குத்தான் மூன்று மொழித் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம் என்று நாமாகவே புரிந்து கொள்ள வேண்டும்.
மொழியைக் கற்கும் பளு இந்தியர் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி அவரவர் தாய்மொழியும் ஆங்கிலமும்தான்.
நேருவின் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டதே மாபெரும் தவறு. அந்த உறுதிமொழியை சட்டமாக்க பாராளுமன்றத்தில் வடிவம் கொடுத்திருக்க வேண்டும்.
ஆர்எஸ்எஸ்-சின் மொழிக் கொள்கை நாட்டை நாசப்படுத்திவிடும்.
என்றைக்கு பன்முகத் தன்மையை ஆர்எஸ்எஸ் அங்கீகரிக்கிறதோ அன்றுதான் அமைதி நிலவும்.