ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பல முனைகளில் இருந்து கேள்விகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
ஏன் மாரடைப்பு வந்ததை தடுக்க வில்லை என்பதை தவிர எல்லா கேள்விகளையும் கேட்டு வருகிறார்கள்?
இதற்கான விடையை அப்போலோ மருத்துவமனை இன்னும் காலம் தாழ்த்துவதில் நியாயம் இல்லை.
சசிகலா புஷ்பா கட்சியிலிருந்து விலக்கப் பட்ட ராஜ்ய சபை உறுப்பினர். ஜெயலலிதாவை குற்றம் சுமத்தி பாராளுமன்றத்திலேயே பேசியவர்.
அவர் வழக்குப் போட்டிருக்கிறார் பொதுசெயலாளர் தேர்தலை நிறுத்தி வைக்க. நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது.
தொடர்ந்து மரணத்தில் மர்மம் இருப்பதாக பேசி வருகிறார்.
நடிகை கௌதமி இதில் பிரதமர் தலையிட்டு விளக்கம் தர வேண்டும் என்று கோரி அவருக்கே கடிதம் எழுதினர். நினைவூட்டலும் எழுதினர். பதில்தான் இல்லை.
சோவின் இடத்துக்கு வந்திருக்கிற ஆடிட்டர் குருமூர்த்தியும் தன் பங்குக்கு கேள்விகளை எழுப்பி வருகிறார். சசிகலா விலக வேண்டும் என்றும் அப்போதுதான் அ தி மு க பாதுகாக்கப் படும் என்றும் அ தி மு க உறுப்பினர் போலவே எழுதுகிறார். தேச விரோத திராவிட அரசியலைத் தகர்த்த கட்சி அ தி மு க என்றும் இந்த மாற்றத்தை எம்ஜியாரும் ஜெயலலிதா ஆகிய இருவரும் கொண்டு வந்தனர் என்று எழுதுகிறார். எப்போது அ தி மு க திராவிட கட்சி இல்லை என்று ஆனது என்பதை அவர் விளக்கவில்லை. பெரியாரையும் அண்ணாவையும் தலைவர்களாக வழிகாட்டிகளாக ஏற்றுகொண்டுதான் இன்றும் அ தி மு க இயங்கி வருகிறது. திராவிட இயக்க கொள்கைகளை பொறுத்த வரையில் இரண்டும் இரட்டை குழல் துப்பாக்கிகள்தான்.
ஹுசைனி என்ற கராத்தே வீரர் பல சலுகைகளை ஜெயலலிதாவிடம் இருந்து பெற்றவர். தன் இரத்தத்தால் ஜெயலலிதா உருவத்தை உருவாக்கி அவரிடம் பாராட்டு பெற்றவர். அவர் ஜெயலலிதா கொலை செய்யப்பட நடராஜன் பின்னணியில் இருந்து சதி செய்ததாக பேட்டி கொடுக்கிறார்.
இன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விடுமுறை கால நீதிபதியான வைத்தியநாதன் பெஞ்ச் முன்பாக வந்தபோது எனக்கும் தனிப்பட்ட முறையில் இது சம்பந்தமாக சந்தேகம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். தன்னிடம் இந்த வழக்கு முன்பே வந்திருந்தால் வேறு நடவடிக்கைகள் எடுத்திருப்பேன் என்றும் சொல்லி அ தி மு க தொண்டர்கள் மத்தியில் பெருத்த விவாதத்தை உருவாக்கியிருக்கிறார். தேவைபட்டால் உடலை தோண்டி எடுத்து மறு ஆய்வு செய்ய உத்தரவிடுவேன் என்றும் சொல்லியிருக் கிறார்.
நக்கீரன் இதழ் ஜெயலலிதாவின் கால்களை காணோம் என்று புது செய்தி வெளியிடுகிறது.
பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தத் தான் இவை பயன்படும்.
ஜெயலலிதாவின் வாரிசு தீபா தான் என்று கருத்தாக்கத்தை உருவாக்க தினமலர் போன்ற பத்திரிக்கைகள் தீவிரமாக முயற்சிக் கிறார்கள். எல்லாம் தோற்றுப் போய் இன்று சசிகலா அ தி மு க பொதுக் குழுவில் ஏக மனதாக பொதுசெயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். அது வேறு.
நாம் குறிப்பிட விரும்புவது ஜெயலலிதா எழுபத்தி ஐந்து நாட்கள் அப்பலோ மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். அது தொடர்பாக பலரும் பல வித சந்தேகங்களை எழுப்புகிறார்கள். அதை விளக்கி சந்தேகத்தை போக்க வேண்டியது அப்போலோவின் கடமையா இல்லையா???
ஏய்ம்ஸ் மருத்துவர்கள் , லண்டன் மருத்துவர்கள் , இங்கேயே பதினேழு மருத்துவர்கள் கொண்ட குழு, பதினெட்டு செவிலியர்கள் குழு என்று ஒரு படையே ஜெயலலிதாவை கூட இருந்து பார்த்துக் கொண்டிருந்திருக் கிறார்கள்.
ஜெயலலிதாவின் கன்னத்தில் இருந்த நான்கு துளைகள் போன்ற குறிகள் அவர் உடல் கெட்டு போகாமல் இருக்க எம்பாமிங் என்ற வகை மருத்துவம் செய்ததால் வந்தது. அவர் இறந்தது முன்பே. அறிவித்தது பின்பு என்றும் வேறு சொல்கிறார்கள்.
குற்றம் சுமத்துபவர்கள் உண்மையில் மருத்துவர்களைத்தான் குறி வைக்கிறார்கள். ஏதோ அவர்கள் ஒரு கொலைக்கு உடந்தையாக இருந்ததைப்போல. எனவே விளக்கம் தர வேண்டியவர்கள் மருத்துவர்களும் மருத்துவ மனையும் தான்.
இன்று வெங்கையா நாயுடு எல்லாம் சரியாகத்தான் நடந்தது இதில் மர்மம் ஒன்றும் இல்லை என்று பேசியிருக்கிறார் .
ஒரு புகைப்படம் கூட ஏன் வெளியிடவில்லை? ஏன் யாரையும் நேரில் அல்லது தூரத்தில் இருந்து பார்க்க அனுமதிக்க வில்லை இந்த இரண்டு கேள்விகள்தான் விடை தர அல்லது பெற வேண்டிய கேள்விகள்.
இரண்டிற்கும் வேறு யாரும் விடை தர முடியாது. மருத்துவ மனைதான் தர வேண்டும். நீதிமன்றம் கேட்டால்தான் கொடுப்போம் அல்லது நாங்கள் ஏன் விடை தர வேண்டும் என்று பதில் சொல்வதெல்லாம் பிரச்னையை வளர்க்கத் தான் பயன்படும்.
அப்போலோ மருத்துவமனை விளக்கம் தரட்டும்.