சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஒரு ஏக்கர் நிலத்தில் அகழ்வாராய்ச்சி செய்ததில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு தமிழர் நாகரிகம் இருந்தது என்பதற்கு ஆதாரமாக 5000 க்கும் மேலான அரியவகை பொருட்கள் கிடைத்துள்ளன.
2015 ல் தொடங்கிய ஆய்வு இப்போது மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் மத்திய அரசு காட்டும் இரட்டை முகம் கொதிப்படையச் செய்கிறது.
முதலில் இதில் தீவிரம் காட்டிய அதிகாரி ராமகிருஷ்ணனை அசாம் மாநிலத்துக்கு தூக்கி அடித்தது மத்திய அரசு. கேட்டால் இது சாதாரண இட மாற்றம் என்று சாக்கு கூறுகிறது.
இரண்டாவது நீதிமன்றம் தலையிட்டு ஏன் இங்கேயே ஒரு மியூசியம் அமைக்கக் கூடாது என்று நீதிமன்றம் கேட்ட பிறகு தமிழக அரசு நாங்கள் இரண்டு ஏக்கர் நிலம் தருகிறோம் ஆனால் மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று சாவகாசமாக பதில் கூறுகிறது மாநில அரசு. கொஞ்சம் கூட அக்கறையோ அவசரமோ காட்டாமல் மத்திய அரசை எப்படி குறை கூறாமல் இருப்பது என்பதிலேயே தமிழக அரசு அக்கறை காட்டுகிறது. பாவம் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் மத்திய அரசை நிர்பந்திக்க தயாராக இல்லை.
மூன்றாவது மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனும் மகேஷ் சர்மாவும் வந்து பார்த்து விட்டு வெறும் நாற்பது லட்ச ரூபாயை மூன்றாம் கட்ட பணிகளுக்காக ஒதுக்கினார்கள். ஒரு ஏக்கரிலேயே இவ்வளவு கிடைத்தபின் 150 ஏக்கரிலும் ஆய்வு செய்தால்தான் ஆராய்ச்சி முழுமை பெறும் என்று தெரிந்தும் மத்திய அரசு கேவலமாக நடத்துகிறது. கண்ட கொள்ளாமல் இருக்கிறது மாநில அரசு.
எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பிய பின்னும் மத்திய அரசு முரண்டு பிடிக்கிறது.
மத்திய அரசு சார்பில் இதுவரை ஆக்கபூர்வமாக எந்த ஒரு அறிக்கையும் இல்லை.
ஆதிச்ச நல்லூரில் கிடைத்த ஆதாரங்கள் 6000 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்த அடையாளம் காட்டுகின்றன.
இந்நிலையில் பாண்டிய மன்னர்கள் ஆண்ட பூமியில் இன்னும் நிறைய அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப் படவேண்டும் என்ற கருத்து வலுப் பெற்றிருக்கிறது.
ஒரே நாடு ஒரே கலாசாரம் என்று பேசுகிறவர்கள் வேறு கலாசாரம் இருந்தது என்பதை மூடி மறைக்கத்தான் முயல்வார்கள். ஏன் கண்டு பிடிக்கப் பட்ட பொருட்களோடு எதையாவது கலந்து இதுவும் சிந்து சமவெளி நாகரிகம்தான் என்றும் சொல்வார்கள். கண்காணிக்க வேண்டிய தமிழக அரசு கையாலாகாத் தனமாக நடந்து கொள்வது வேதனை யளிக்கிறது.
தேவைப் பட்டால் தமிழக அரசும் நிதி ஒதுக்கி ஆராய்ச்சியை ஆழப் படுத்த வேண்டும். இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறை (ஏ எஸ் ஐ) மத்திய அரசு கையில் இருப்பதால் நாம் ஒன்றும் செய்ய முடியாது என்பதில்லை.
ஆராய்ச்சி நடப்பது நம் நாட்டில். மாநில அரசு ஒன்றும் செய்ய முடியாது என்பதில்லை. தகுந்த கண்காணிப்போடு செயல் பட்டால் எதையும் மூடி மறைக்க முடியாது.
ஆனால் அதற்குரிய முனைப்பை மாநில அரசு காட்ட வேண்டும்.
தவறினால் ஆட்சியில் இருப்போரை வரலாறு மன்னிக்காது.