யாகம் வளர்த்தால் ஜெயலலிதா விடுதலையாவாரா?

   சிறப்பு நீதி மன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்  பட்ட ஜெயலலிதா விடுவிக்கப் பட வேண்டும் என்று ஊர் ஊராக யாகம்
 வளர்த்துகொண்டும்  கோவில் கோவிலாக பலவிதமான சடங்குகளை செய்து கொண்டும் அ தி மு க அமைச்சர்கள் செய்து வரும் காரியங்கள் நமது அரசியல் எந்த அளவு தரங்கெட்டு போய்க் கொண்டு இருக்கிறது என்பதற்கு சான்றாக விளங்கி வருகிறது. 
     சொத்துக் குவிப்பு வழக்கின் தன்மைகள் விவாதிக்கப் படுவதற்கு மாறாக இவர்கள் செய்து வரும் காரியங்கள் பக்திக்கு புது அர்த்தம் கொடுக்கின்றன .   
     அர்த்த ராத்திரியில் கன்னகோல் திருடன் பூஜை போட்டு விட்டு திருட கிளம்புவது பற்றி கேள்விப் பட்டு இருக்கிறோம்.     இறைவன் திருட்டை ஆசிர்வதிப்பானா?    திருடன் பிரார்த்திப்பது அவன் விருப்பம்.  ஆனால் இறைவன் அதற்கு உடந்தையாக இருப்பான் என்று நம்புவது  சரியா? 
     அ தி மு க நாளேட்டில் பக்கம் பக்கமாக அமைச்சர்கள் கோவில் கோவிலாக ஏறி இறங்கும் காட்சிகள்  .   இவர்கள்தான் பெரியார் அண்ணா கண்ட இயக்கத்தின் வாரிசுகளாம். 
     சாமியை நம்பினால் பிறகு ஏன் பெரிய வக்கீல்களை வைத்து மாதக்கணக்கில் வாதாடுகிறார்கள். நாங்கள்  குற்றவாளிகள் அல்ல என்று சொல்லிவிட்டு அமர வேண்டியது தானே. 
     ஜெயலலிதா மெச்ச வேண்டும் என்பதற்காக இவர்கள் செய்து வரும் காரியங்கள் தமிழ் நாட்டின் பெயரைக் கெடுத்துக் கொண்டிருப்பதுதான் மிச்சம். 
     உங்கள் குற்றத்தை சுவாமி மேல் போட்டு பக்தியை கொச்சைப் படுத்தாதீர்கள். .   
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

+91-91766-46041