பதவியேற்புக்கு ,ராஜபக்சே, நவாஸ் ஷெரிப் அவசியமா என்ற கேள்வி எழுந்தது. முதன் முதலாக காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது மோடி தலைமையில்தான். எனவே சார்க் நாடுகளின் தலைவர்களை பங்கு பெற அழைத்து தனது நல்லெண்ணத்தை பதிவு செய்ய மோடி விரும்பியிருக்கலாம்.
ஆனால் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் தொடரும் நிலையில், இலங்கையில் நடத்தப் பட்ட இனப்படுகொலைகள் ஐ.நா. மன்றந்தின் முன் விசாரணையில் இருக்கும் நிலையில் ,இவர்களது வரவு என்ன மாற்றத்தை ஏற்படுத்த உதவும் என்றெல்லாம் கேள்விகள் எழும்பின.
பதவியேற்பு விழாவுக்கு வருபவர்களிடம் பிரச்சினைகளை பேச வாய்ப்பு இல்லை. தீர்வு காணவும் முடியாது. நவாஸ் ஷெரிப் பிடம் தாவூத் இப்ராஹிமையும் ஹபீசையும் ஒப்படையுங்கள் என்று கேட்க முடியவில்லை.தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவத்தை விலக்கிக் கொண்டு அவர்களுக்கு சம உரிமை கொண்ட அரசியல் தீர்வை தாருங்கள் என்று ராஜபட்சேவை கேட்க முடியவில்லை.
இது இரண்டையும் செய்ய முடியாத பட்சத்தில் அந்த அழைப்பு என்பது வெறும் சடங்காகவே இருந்தது. மோடி அரசின் முதல் சறுக்கல் அந்த நடவடிக்கை.
அமைச்சர்கள் சொத்துக் கணக்குகள் தர வேண்டும் என்றது வரவேற்கப் பட்டது . அகங்காரத்தில் குதிக்காமல் அடக்கத்தோடு ,நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஆற்றப் பட்ட குடியரசுத் தலைவர் உரையும் அதை தொடர்ந்த மோடியின் பதிலுரையும் எல்லாரோடும் இணக்கமாகப் போகத் தயார் என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப் படுவது மட்டும் நின்ற பாடில்லை. இந்திய அரசின் தலையீட்டின் பேரில் மீனவர்கள் விடுவிக்கப் படுகிறார்களே தவிர படகுகள் விடுவிக்கப் படவில்லை.
இந்திய கடற்படை எங்கே போனது என்றும் தெரியவில்லை. ஆண்டாண்டு காலமாய் இலங்கை கடற்படை மட்டும் கைது செய்து கொண்டிருக்க இந்திய கடற்படை இந்திய எல்லையில் நிறுத்தப் பட்டு நமது மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறுவது ஏன்?
முதன்முதலாக பூடான் சென்று நமது நல்லெண்ணத்தை விதைத்து வந்திருக்கிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து கர்நாடகா அமைச்சர்கள் கட்சி பேதம் பார்க்காமல் அமைக்க கூடாது என்று குரல் கொடுக்க தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட தேவை இல்லை என்கிறார் நமது முதல்வர். துறை தாண்டி கருத்து சொல்லாதீர்கள் என்ற கட்டுப்பாடு மத்திய அமைச்சர்களுக்கு மோடி அரசு விதிக்க வேண்டும். கலைஞர் அனுப்பிய வாழ்த்திற்கு மறக்காமல் நன்றி சொல்லி இருக்கிறார். சரியான திசையில் செல்வது போல் தோன்றினாலும் உறுதிப் படுத்த இன்னும் சில மாதங்கள் ஆகும்.
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)