புலிகள் மீதான தடையை நீடிக்கும் இந்திய அரசின் நோக்கம் என்ன ?

விடுதலைப் புலிகள் போராளிகளா பயங்கர வாதிகளா என்ற விவாதம் மறைந்து நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன.    அவர்கள்தான் ஒழிக்கப்   பட்டு விட்டார்கள் என்று சிங்கள அரசே மார் தட்டிக் கொண்டிருக்கிறதே? 

சிங்கள அரசோடு கை கோர்த்து விடுதலைப் புலிகளை ஒழித்ததில் இந்திய அரசுக்கு பெரும் பங்கு உண்டு என்ற களங்கத்தை சுமந்து கொண்டிருக்கும் சோனியா ,ராகுல் அதிகாரத்தில் இயங்கும் இந்திய அரசு மேலும் மேலும் களங்கத்தை பெரிதாக்கிக் கொண்டே போகிறது.
லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை காவு கொண்ட இறுதிக் கட்ட  போரின்போது அவர்கள் பட்ட துயரங்களை விட பல நூறு மடங்கு துயரத்தை தற்போது உயிர் வாழும் தமிழர்கள் அனுபவித்து வருகிறார்கள்.
இன்னும் இருபது ஆண்டுகளுக்கு ஆயுத போராட்டத்தை தமிழர்கள் கனவு கூட காண முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.   
அதுவும் இந்தியாவின் ஆதரவு இல்லாமல் அங்கு எந்த மாற்றமுமே நிகழ முடியாது.   அதனால்தான் இந்திராகாந்தி தமிழர்களுக்கு இந்தியாவில்  ஆயுத பயிற்சி அளித்தார்.    அதன் விளைவாகத்தான் இலங்கை அரசும் பணிந்து வந்தது.      ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் உருவானதும் இந்தியாவின் மீதான அச்சத்தின் விளைவாகத்தான்.    அந்த அச்சம் இப்போது இல்லை.   ஏன்?  போரில் பங்காளியான அரசின் மீது அச்சம் எப்படி வரும் ?   
இந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு அவ்வப்போது மறுத்து வருகிறது.    இந்த மறுப்பில் உண்மை இருந்தால் என்ன செய்ய வேண்டும் இந்திய அரசு?
விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும்.
அவர்கள்தான் இல்லையே?   இல்லாதவர்கள் மீது தடை எதற்கு?
சமீபத்தில் தமிழர் கூட்டமைப்பு தலைவர்களை சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அரசின் மீதான தன் அதிருப்தியை  வெளியிட்டார். தமிழர்களுக்கு ஓரளவுக்கு அதிகாரம் அளிக்கும் பதின்  மூன்றாவது சட்ட திருத்தத்தை ரத்து செய்ய முயலும் சிங்கள அரசின் முடிவை இந்தியா ஏற்காது என்ற பொருளில் கருத்து தெரிவித்தார்.
போர் முடியும் வரை அரசியல் தீர்வே இறுதியானது என்று சொல்லிக் கொண்டிருந்த இந்திய அரசு போர் முடிந்து நான்காண்டுகள் கழிந்தும் அரசியல் தீர்வைப் பற்றிப் பேச மறுக்கிறதே காரணம் என்ன?
இந்திய அரசு தமிழர்களுக்கு உதவும் என்ற உணர்வு சிங்களர்களுக்கு வந்தால் ஒழிய அவர்கள் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்க ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
அந்த உணர்வை சிங்களர்களுக்கு வர வைப்பது எப்படி? முதல் படியாக புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்.   
தடை நீங்கினால் தமிழர்கள் தெருவில் நின்று போராடுவார்கள்.  போராட்டத்தை அரசு அடக்க சட்டத்தை நாட முடியாது. மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இலங்கையில் மனித உரிமைகளுக்கு குரல் கொடுப்போம் என்று இந்திய அரசு சொல்ல முடியும். ஏன் தலையிடுவதற்கான காரணத்தை உருவாக்கி கொள்ள முடியும் . ஈழம் அமைய இந்தியா தன் படையை அனுப்ப தயங்காது என்ற நிலை உருவானால் தவிர அங்கு அரசியல் தீர்வு கிடைக்காது.
சோனியா –ராகுல் கட்டுப் பாட்டில் உள்ள இந்திய அரசு அத்தகைய முடிவை எடுக்காது என்றால் தலைமை மாறும் வரை உணர்வாளர்கள் காத்திருக்க வேண்டியதுதான்.   அல்லது தலைமையை மாற்ற முயற்சிக்க வேண்டியதுதான். வேறு வழி கண்ணுக்கு தெரிய வில்லை.
அதுவரை புலிகள்  மீதான தடை என்பது தமிழ் உணர்வாளர்கள் மீது ஈழம் பற்றி பேசுபவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க மிரட்ட மட்டுமே பயன்படும்.
அதாவது சிங்களர்கள் எதை விரும்புவார்களோ அதைத்தான் இந்திய அரசும் செய்யும் என்பது உறுதிப் படும்.    
தமிழகத்தில் உலவும் காங்கிரஸ்காரர்கள் இதை மறுத்தால் அவர்கள் செய்ய வேண்டியது தங்கள் தலைமையை உடனடியாக புலிகள் மீதான தடையை நீக்க குரல் கொடுக்க வேண்டும்.  
ராஜீவ் காந்தி படுகொலை மட்டுமல்ல பிரபாகரன் படுகொலையும் மறக்க முடியாததுதான்.    ஆனால் அவைகள் தீர்வுகள் ஏற்பட தடைகளாக இருக்க முடியாது.
ஆயுத போராட்டம் தராத வெற்றியை அனைத்து மக்களின் எழுச்சிப் போராட்டம் தரும்  என்ற உணர்வில் தான்   இப்போது உணர்வாளர்கள் இருக்கிறார்கள்.
அந்த உணர்விற்கு உயிர் கொடுத்து அரசியல் தீர்வு ஏற்படச் செய்ய இந்திய அரசினால்தான் முடியும்.
அதற்கு சிங்களர்கள் உடன்பட வேண்டும் என்றால் , இந்தியாவின் நிலைப்பாட்டில் மாறுதலை தெரிவிக்க வேண்டும்.   அதற்கு முதல்
படி புலிகள் மீதான தடை நீக்கம்.     சிந்திக்குமா இந்தியா?
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)