தமிழக பா ஜ க முயற்சி எடுத்து 122 மீனவர்களை அழைத்துக் கொண்டு டெல்லி சென்றார்கள். சென்றது எதற்காக? தாக்கும் இலங்கை கடற்படையிடம் இருந்து பாதுகாப்பு கோரி!
செப்டம்பர் 2013 ல் நரேந்திர மோடி திருச்சியில் முழங்கினார். “மீனவர் பிரச்சினை கடலில் இல்லை. பலவீனமான மத்திய அரசிடம் உள்ளது. அதை தூக்கி எறியுங்கள். ”
தூக்கி எறிந்தாகி விட்டது. இப்போதுதான் பலமான மத்திய அரசு வந்து விட்டதே? இலங்கை அரசுக்கு சுடும் தைரியம் வராது?
மண்டையில் அடித்தால் போல் சிறிசெனவும் இலங்கை அமைச்சர்களும் சொன்னார்கள். ” எல்லை தாண்டினால் சுடுவோம்! “
படகுகள் பறிமுதல் தொடர்ந்தது. மீனவர்களை அழைத்துக்கொண்டு சென்றது தமிழக பா.ஜ.க. அமைச்சரிடம் பேசிவிட்டு அழைத்து சென்றார்களா? அமைச்சர் என்ன சொல்வார் என்பது இவர்களுக்கு தெரியாதா/
சர்வதேச கடல் எல்லையை தாண்டாதே? ஆழ் கடல் மீன்பிடிப்புக்கு போ ! வேறு வேலை தேடு! இதை சொல்வதற்கா ஒரு அமைச்சர்? இதை கேட்டுக் கொண்டு வரவா மீனவர்களை அழைத்து சென்றீர்கள்?
இதை விட கொடுமை ! மதுரை உயர்நீதி மன்ற கிளையில் பாதுகாப்பு கோரி மனு செய்தால் அதிலும் மத்திய அரசு பதில் மனு போட்டது. ” இந்திய மீனவர்கள் அத்துமீறி சென்று மீன் பிடிப்பதால் தாக்கப் படுகின்றனர். . தடை செய்யப் பட்ட வலைகளை பயன்படுத்துகின்றார்கள். அதிக திறந கொண்ட விசைப் படகுகளை பயன் படுத்து கிறார்கள். தங்கம் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தனர். இந்திய கடலோர காவல் படை பொறுப்பு ஏற்க முடியாது. “
இந்திய மீனவர்கள் தவறு செய்தால் கட்டுப்படுத்த வேண்டிய கடமை இந்திய கடலோர காவல் படைக்கு உள்ளது. தவறு செய்தால் இவர்கள் நடவடிக்கை எடுக்கட்டும். மாறாக அந்நிய நாட்டு கடற்படை சுடும் இவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்றால் இவர்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு?
சர்வதேச கடல் எல்லை என்பது நம் நாட்டு எல்லையில் இருந்து வரையறை செய்வது. கச்சதீவு நம்நாட்டு எல்லையில் இருந்தது. அதை தாரை வார்த்து கொடுத்தது யார்?
அப்போது செய்து கொண்ட ஒப்பந்தம் பாரம்பரிய மீன்பிடி உரிமையை தக்க வைத்துக் கொண்டது அல்லவா?
சிங்கள இன வாத அரசுக்கு தமிழக மீனவர்கள் ஒரு இடைஞ்சலாகவே பார்க்கப் படுகிறார்கள். மீன்பிடி தொழிலில் இருந்து இவர்களை விரட்டுவதில் குறியாக இருகிறார்கள். அதற்கு டெல்லி துணை போகிறது.
பா. ஜ. க வின் உண்மை சொரூபம் இவ்வளவு விரைவில் வெளிவரும் என்று யார்தான் எதிர் பார்த்திருப்பார்கள்.?
மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் வந்தாலும் இதைத்தான்சொல்லப் போகிறார்கள்
மிஸ்டு கால் கொடுத்தவர்கள் மீண்டும் ஒரு மிஸ்டு கால் கொடுங்கள் . விலகுகிறோம் என்று! மிஸ் பண்ணிடாதீங்க !!!!!.