” சாமியாரிணி ராதே தன்னை ” ராதேமா” என்று அழைத்துக்கொண்டு சீடர்களையும் அப்படியே பிரசாரம் செய்ய தூண்டுகிறார் . அது எங்களது மத உணர்வுகளை காயப்படுத்துகிறது.தன்னை கடவுள் அவதாரம் என அழைத்துக் கொள்வதும் தவறு. . தன்னை கடவுள் எனவும் அம்மா என அழைத்துக் கொள்ளவும் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் ” என கோரி போபால் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடுத்து அதில் நீதிமன்றம் அறிவிப்பு அனுப்பியிருக்கிறது.
ஆர்.கே. பாண்டே என்ற அந்த வழக்கறிஞர் என்ன நோக்கத்திற்காக அந்த வழக்கை பதிவு செய்தார் என்பதை ஆராய வேண்டும்.
உண்மையிலேயே போலிகளை ஒழிக்கும் நோக்கில் வழக்கா அல்லது பிராமணர் அல்லாதவர் ஆன்மிக உலகில் ஆட்சி செய்ய வருவதை தடுக்கும் முயற்சியா என்பதை ஆராய வேண்டும்.
ராதே மா தன்னுடன் எப்போதும் ஒரு அடி நீள திரிசூலத்தை விமான பயணத்தின் போதுகூட கையில் ஏந்தி செல்வாராம்.
போலி சாமியர்களை அடையாளம் காணும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உண்டா என தெரியவில்லை. நாட்டில் ஆயிரக்கணக்கான சாமியார்கள் உலவுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் நூற்றுக்கணக்கில் சீடர்கள். அரசு என்ன செய் முடியும். ?
குருமார்கள் பொருள் ஆசை இல்லாதவர்களாக சமுதாய சிந்தனை உள்ளவர்களாக இருந்தால் வரவேற்கலாம். பெரும்பாலானவர்கள் அப்படி இல்லையே!!!
பொதுவாக பிராமணர்கள் அல்லாதவர்களை குருமார்களாக ஏற்றுக் கொள்வது அரிதிலும் அரிது. மேல்மருவத்தூரிலும் வேலூரிலும் பிரசித்தி பெற்று விளங்கும் ஆதி பராசக்தி பீடமும் சக்தி பீடமும் பிராமணர் அல்லாதவர்களை பீடாதிபதிகளாக உயர்த்திப் பிடித்தாலும் அவர்களை கடவுளுக்கு இணையான ” அம்மாவாக” பேசப் படுகிறார்களா என்றால் இல்லை என்றுதான் பதில் வரும். இத்தனைக்கும் இருவரையும் ” அம்மா ” என்றுதான்அழைக்கிறார்கள். . ஏனென்றால் இருவரும் தங்களுக்கு சக்தி உண்டு என்று சொல்லாமல் அங்கே நிலைநாட்டபட்டிருக்கும் இறைவிக்குத்தான் சக்தி உண்டு என்றே சொல்கிறார்கள்.
கேரளாவில் மா ஆனந்தமயீ பிறப்பில் மீனவராக இருந்தாலும் உயர்த்திப் பிடிக்கப் படுவதிலும் நிர்வாகத்திலும் பிராமணர்கள் இருக்கிறார்கள்.
இடம் ,மொழி ,வகுப்பு எதுவாக இருந்தாலும் ஒன்றில் மட்டும் எல்லாரும் ஒன்று சேருகிறார்கள். அதுதான் பண ஆதிக்கம்.
செல்வத்தை குவிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் இந்த ஆன்மிக மையங்கள் எந்த ஆய்வுக்கும் ஆட்படாமல் பாமரர்களையும் நம்பிக்கையாளர்களையும் ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லாம் சரி. ஆன்மிகத்தில் அம்மா என்று அழைத்துக்கொண்டு எங்களை ஏமாற்றக் கூடாது என்று வழக்கு போட்டவர் கள். அரசியலில் உலவும் , அம்மாக்களை ,வரலாற்றுத் தாய்களை தடை செய்யக் கோருவார்களா???? கோர முடியுமா???