நெய்வேலியில் உற்பத்தியாகும் 1450 மெகவாட் மின்சாரத்தில் தமிழ்நாட்டின் பங்கு 40 %..
ஜூலை மாதம் 20 ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தத்தில் நிரந்தர தொழிலாளர்கள் 12,000 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். 2012 ஜனவரியில் புதுப்பித்திருக்க வேண்டிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் 30 முறை பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவேதும் ஏற்படாமல் போகவே அறிவிப்பு கொடுத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
தி மு க ஆட்சிகாலத்தில் 1997 ல் 60 % ஊதிய உயர்வும் 2007 ல் 25 % ஊதிய உயர்வும் ஒப்பந்தமானது குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது பத்து சதத்துக்கு மேல் உயர்வு கிடையாது என்று நிர்வாகம் பிடிவாதம் பிடிப்பதால் பிரச்சினை வளர்ந்து கொண்டே போகிறது.
1500 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் நிறுவனத்தில்
தொழிலாளர்களுக்கு ஒரு நீதி நிர்வாகத்துக்கு ஒரு நீதி என ஊதிய உயர்வில் பாரபட்சம் கடைபிடிக்கப் படுவது ஏன் ?
உயர்நீதிமன்றம் வேலைநிறுத்தத்தை சட்டவிரோதம் என அறிவித்திருப்பது சரிஇல்லை என்பதோடு ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரச்சினையிலும் நிர்வாகம் பாரபட்சம் காட்டுகிறது.
ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து நிர்வாகம் சமாளித்து வந்த நிலையில் 2013 ல் ஒப்பந்த தொழிலாளர்கள் 52 நாள் தொடர் வேலைநிறுத்தம் செய்ததற்கு தொ மு ச செயலாளர் திருமாவளவன் தான் காரணம் என குற்றம் சுமத்தி 2015 ல் அவரை திடீரென பணி நீக்கம் செய்ததன் நோக்கம் என்பது புதிராக இருக்கிறது.
ஏற்கனவே மோடியின் ஆட்சி தனியார் நிறுவனங்களின் ஏஜெண்டு போல் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் லாபம் தரும் நெய்வேலி அனல் மின் நிலையத்தையும் நட்டத்தில் வீழ்த்தி அதையே காரணம் காட்டி தனியார் மயமாக்கும் ரகசிய திட்டம் வேலை செய்கிறதோ என்ற அச்சத்தையும் அனைவர் மத்தியிலும் நிரவாகத்தின் போக்கு உருவாக்கியிருக்கிறது.
முதல்வர் ஜெயலலிதா சென்ற மாதம் 23 ம் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் உடனடியாக நிலக்கரித் துறை அமைச்சர் இதில் தலையிட்டு தீர்வு காண உதவ வேண்டும் என கேட்டு கொண்டார். இதுவரை பதில் இல்லை.
பிரதமர் சென்னை வந்து ஜெயலலிதா வீட்டில் விருந்து உண்டபோது அளிக்கப் பட்ட 21 கோரிக்கைகள் அடங்கிய மனுவிலும் நெய்வேலி பிரச்சினை இடம் பெற வில்லை.
இரண்டு நாட்களுக்கே நிலக்கரி இருப்பு இருக்கும் நிலையில் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம் உள்ளது.
தமிழக அரசும் மத்திய அரசும் தீவிர கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டிய பிரச்சினையில் மெத்தனம் காட்டுவதும் தொழிலாளர் தலைவர்களை மிரட்டி பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதும் நிலைமையை மோசமாக்கவே உதவும்.
ஒருவேளை அவர்கள் திட்டமிடுவதும் அதுதானோ?