நம்முடைய முதல்வரின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மீது பனிரண்டு வருடங்களாக ஹீராயின் போதைப் பொருள் வைத்திருந்த தாக வழக்கு நடப்பதும் அதன் மீதான விசாரணை ஒரு வழியாக முடிந்து தீர்ப்பு வழங்க இருப்பதும் மக்களுக்கு தெரியும்.
தெரியாத விஷயம் தீர்ப்பு சொல்லும் நேரத்தில் சொல்லக் கூடாது என்று நீதிபதிகளை மிரட்டுவது யார் என்பதுதான்?!
தீர்ப்பு சொல்லும் தேதி அன்று நீதிபதி ராமமுர்த்திக்கு அனாமதேயக் கடிதம் ஒன்று வந்ததாகவும் அவர் அதன் மீது உயர் நீதி மன்றத்துக்கு அனுப்பி உரிய ஆலோசனை கோரியதாகவும் செய்திகள் வெளி வந்தன. அவருக்கு என்ன ஆலோசனை தரப்பட்டது என்பது மக்களுக்கு தெரியாது. ஆனால் அவர் பணிமாற்றம் செய்யப் பட்டது மட்டும் செய்தி வெளியானது. வழக்கும் திரு சின்னப்பன் என்பவருக்கு மாற்றப்பட்டது. அவருக்கும் அதே போன்று மிரட்டல் கடிதம் வந்ததாகவும் அவரும் உயர் நீதி மன்ற அறிவுரையை கோரப் போவதாகவும் அறிவித்து வழக்கை இருபத்து ஆறாம் தேதிக்கு மாற்றியதுடன் விசாரணையை வேறு கோர்ட்டுக்கு மாற்றவும் கோரியிருக்கிறார்.
அதுவும் மிரட்டல் கடிதம் அனுப்பியது தொழில் செய்து வரும் வழக்கறிஞர் ஒருவர் என்று செய்தி வெளியாகிறது.
இப்படி எல்லாம் நடந்தால் பொது மக்களுக்கு நீதிமன்றங்களின் மீது எப்படி நம்பிக்கை ,மதிப்பு வரும். எல்லாவற்றுக்கும் மேலாக காவல் துறையும் நீதிபதிகளும் இந்த வழக்கில் எப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள்?
மிரட்டியவர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லை? யார் என்று ஏன் அடையாளம் காட்ட வில்லை ? இதில் காவல் துறைக்கும் நீதிபதிகளுக்கும் பொறுப்பு ஏதும் இல்லையா? யார் மீதும் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவானதாக தகவல் இல்லை. புகார் கொடுத்து விசாரிப்பதில் அவர்களுக்கு என்ன பிரச்சினை? புகார் கொடுக்க வேண்டாம் என்று அதிகாரத்தில் இருப்பவர்கள் தடுத்தால் தவிர நீதிபதிகளும் காவல் துறையும் இப்படி மௌனமாக இருக்க மாட்டார்கள்.
அவரது நோக்கம் என்ன? விடுதலை வாங்கிகொடுப்பதா? தண்டணை வாங்கி கொடுப்பதா?
பெங்களுருவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரும் வரையில் இந்த தீர்ப்பு வரக்கூடாது என்பதற்காக இந்த மிரட்டல் என்றால் என்ன பொருள்? விடுதலையாகி விட்டால் சுதாகரன் ஆட்சியாளர்களுக்கு எதிராக திரும்பி விடுவார் என்று எதிர் பார்கிரார்களா? அவர் விடுதலை யாவதிலும் தண்டணை பெறுவதிலும் பொதுமக்களுக்கு எந்த கருத்தும் இல்லை. ஆனால் ஒரு கிரிமினல் வழக்கில் தீர்ப்பு சொல்லப் படும் நேரத்தில் யாரோ ஒருவர் தலையிட்டு தீர்ப்பை நிறுத்த முடியும் என்பது மிகவும் கவலையளிக்க கூடியது. ஆளும் கட்சியின் தலையீடு ஏதும் இல்லை என்பதை நிரூபிக்க வாவது மிரட்டியவர்கள் மீது உடனடி நடவடிக்கை வேண்டும். இல்லையென்றால் இதற்கெல்லாம் ஆளும் கட்சியே பொறுப்பு என்று மக்கள் மன்றம் தீர்ப்பளித்து விடும்.