உயர்நீதி மன்றத்தில் தமிழ் ஏன் கூடாது ?

தமிழில் வாதாடக் கூடாது என்று தமிழ் அறிந்த நீதிபதி மாண்புமிகு மணிக்குமார் அவர்கள் தீர்ப்பளித் திருக்கிறார்.
அரசியல் சட்ட பிரிவு  348 ( 2 ) ன் படி மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரின் அனுமதியோடு தமிழை உயர் நீதி மன்ற மொழியாக பயன்படுத்த அங்கீகாரம் அளிக்காமல் இருப்பதுதான் காரணம்.
தமிழக சட்ட மன்றத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப் பட்டும் கூட ஆளுநரின் செயல் இன்மைக்கு யார் காரணம்?
மத்திய அரசுதான் முழு முதல் காரணம். மாநில அரசின் முடிவை ஆளுநரும் மத்திய அரசின் முடிவை குடியரசுத் தலைவரும் அமுல் படுத்தக் கடமைப் பட்டவர்கள்.
இதற்கான ஆலோசனையை மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் கேட்ட போது அப்போதைய தலைமை நீதிபதி அப்படி செய்வது உகந்தது அல்ல என்று கருத்து தெரிவித்ததை சாக்காக வைத்து மத்திய அரசு காலங் கடத்தி வருகிறது . 
அப்படி கருத்து கேட்க வேண்டிய அவசியமே இல்லை.    வடமாநிலங்களில் சிலவற்றில் இந்தி மொழி , அதற்கான அனுமதியை ஆளுநரிடம் பெற்று , உயர் நீதிமன்றங்களில் பயன் படுத்த பட்டு வருகிறது.
1961  முதல் ஆளுநர் அனுமதி பெறாமலும்    1969 முதல் அனுமதி பெற்றும் உ. பி . இல் இந்தி மொழி உயர் நீதி மன்ற மொழியாக பயன்பாட்டில் இருக்கிறது.    ஆனால் அதற்குப் பிறகு கூட இதர மாநிலங்கள் தங்களுக்கும் தங்கள் மாநில மொழியை உயர் நீதி  மன்ற மொழியாக பயன் படுத்த அனுமதி வேண்டும் என்று போராட முன் வரவில்லை. ஆங்கிலமே போதும் என்று இருந்து விட்டார்கள்.  விழிப்புணர்வு இல்லை என்று மட்டும்தான் சொல்ல முடியும்.    விருப்பம் இல்லை என்று சொல்ல முடியாது.
இந்தி பேசும் மக்கள் தங்கள் மாநிலங்களில் உயர் நீதி மன்றங்களில் இந்தியை பயன் படுத்த முடியும் என்றால் இந்தி பேசாத மாநில மக்கள் தங்கள் மாநிலங்களில் தங்கள் தாய் மொழியை பயன் படுத்த வாய்ப்பு மறுக்கப் படுவது எப்படி நியாயமாகும்?
அதுவும் அரசியல் சட்டத்தில் அதற்கான பிரிவு இருக்கும்போது அதை மறுப்பது அநீதி?
மத்திய அரசில் இருக்கும் தமிழ் அமைச்சர்கள் இதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார்களா?   அவர்களது பங்கு என்ன?
இப்போதும் தமிழ் நீதிபதிகள் அவ்வப்போது தமிழில்தான் கேள்விகளையும் கருத்துக்களையும் நீதிமன்றத்தில் வைக்கிறார்கள்.  அதையே வழக்கறிஞர்கள் வாதத்தில் செய்தால் என்ன தவறு.?  
அனுமதி பெரும் வரை வேண்டுமென்றால் தீர்ப்புகளை ஆங்கிலத்தில் எழுதி விட்டுப் போங்கள்.   வாதிட அனுமதிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை?
ஒரு நாட்டின் குடிமகன் தன் தாய் மொழியில் உச்சநீதி மன்றம் வரையிலும் வழக்காட முடிய வேண்டும்.    செப்பு மொழி பதிநெட்டுடையாள் என்று பெருமை பேசிக்கொண்டால் மட்டும் போதாது. தெலுங்கு பேசுவோருக்கு தமிழ் ,இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் பிற மொழிதான்.   அதேதான் எல்லா மொழியினருக்கும்.
ஆங்கிலம் தெரிந்தால் தான் உலகம் சுற்ற முடியும் என்றால் சுற்ற வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள்.  மற்றவர்களை கட்டாயப் படுத்த வேண்டியதில்லையே.    அதேபோல் இந்தி கற்றால்தான் வேலை கிடைக்கும் என்றால் தேவை உள்ளவர்கள் கற்றுக் கொள்வார்கள்.   இப்போது மும்பையில் உள்ளவர்கள் மராட்டி அல்லது இந்தி பேசுகிறார்கள். டெல்லியில் உள்ளவர்கள் இந்தி பேசுகிறார்கள். கொல்கத்தாவில் உள்ளவர்கள் வங்காளி பேசுகிறார்கள்.   தேவை உள்ளவர்கள் கற்றுக் கொள்வார்கள்.   யாரையும் கட்டாயப் படுத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது ? 
இந்தி பிரசார சபை போதும் இந்தி கற்றுக் கொள்ள.    தேவை உள்ளவர்கள் அங்கு போகட்டும்.   நேரடியாகவோ மறைமுகமாகவோ திணிக்கும்போதுதான் பிரச்னை வருகிறது.  எதன் காரணமாகவும் மாநில மொழிகளின் முக்கியத்துவத்தை  குறைக்கும் முயற்சிகளை அனுமதிக்க முடியாது.
எவரையும் இரண்டாந்தரக் குடிமக்களாக பாவிக்கும் முயற்சியில் யார் இறங்கினாலும் அவர்களுக்கு இந்திய ஒற்றுமையில் அக்கறை இல்லை என்றுதான் பொருள்.
முதலில் உயர் நீதி மன்றங்களில் மாநில மொழிகள் வரட்டும்.   பின்பு உச்ச நீதிமன்றத்தில் என்ன செய்யலாம் என்பது பற்றி விவாதிக்கலாம்.
அடிப்படையில் , அரசு ,சட்ட மன்ற நாடாளுமன்றங்கள், நீதிமன்றங்கள் எல்லாமே மக்களுக்காகத்தான்.   ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அவைகளில்தான் மாற்றங்களை செய்ய வேண்டுமே தவிர மக்கள் தங்களை மாற்றிக் கொள்ளுமாறு கோர யாருக்கும் உரிமை இல்லை.
உச்சநீதி மன்றத்திலும் அனைத்து இந்திய மொழிகளிலும் வாதிட முடியும் என்ற நிலை வர வேண்டும்.  அதுதான் இந்தியா  ஒன்று என்பதன் அடையாளம்.


வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)