ஈழம் – அடுத்து வருவது – துயரமா ? விடியலா?

ராஜபக்சே ஆட்சி மாறியதும் – சிறிசேன அரசு பதவியேற்றதும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது மட்டும் உண்மை.    
ஆனால் வரலாறு அறிந்தவர்களுக்கு சிங்கள பேரினவாதிகள் அவ்வளவு எளிதில் தமிழர்கள் தன்மானத்தோடு வாழ வழி விடுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. 
இன அழிப்பு, போர்க்குற்றம், எல்லாம் நடந்தது என்பதை ஒப்புக் கொள்ளாதவர்கள்  இலங்கை இந்திய அரசுகள்.   
தமிழர்களுக்கு சம உரிமை கொடுப்பதை பற்றி தேர்தலில் கூட பேசாத சிறிசெனாவால்என்ன வகையான தீர்வை தந்து விட முடியும் ?
ராணுவத்தை அகற்ற முடியாது என்றும் தமிழ் கூட்டமைப்பு தனக்கு ஆதரவு அளித்த தற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்தவர் சிறிசேன. 
சிறிலங்கா ஒற்றையாட்சி முறையை தனது அரசியல் சட்டத்தில் கொண்டுள்ளது. 
ஜனநாயக, சோசியலிச குடியரசான இலங்கை மொழி  மதம் ஒருமைத்தன்மை போன்றவற்றில் அரசியல் சட்ட திருத்தும் கொண்டு வரவேண்டுமென்றால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது. நாடு தழுவிய வாக்கெடுப்பு நடத்தி ஒப்புதலையும் பெற வேண்டும். 
இதுவரை பதினெட்டு முறை திருத்தும் செய்திருக்கிறார்கள். அதில் பதின்மூன்றாவது திருத்தும் இந்தியா முன்னெடுத்து கொண்டுவந்தது. ராஜீவ்- ஜெயாவர்தன ஒப்பந்தம் , வடக்கு கிழக்கு மாகாணங்களை உருவாக்குவது செல்லாது என்று இலங்கை உச்ச நீதி மன்றம் அறிவித்து விட்டதால் நிறைவேற்ற முடியாத ஒன்றாக ஆகி விட்டது.
இலங்கை பாராளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கே பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல் படுத்துவோம் என்று பேசியிருப்பது எப்படி செய்யப் போகிறார் என்பதை பொறுத்தது.  
சுஷ்மா ஸ்வராஜ் -சமரவீர மூன்று மணி நேரம் பேசியும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை விபரமாக கூற வில்லை. 
அகதிகளாக வந்திருப்பவர்களை திரும்ப அனுப்புவதுதான் அவர்களது திட்டமாக இருக்குமோ என்ற அச்சம் அனைவர் மனத்திலும் பதிந்து விட்டது. 
ராணுவம் அகலாது- காணிகள் திரும்ப கிடைக்காது. பாதுகாப்பு உறுதியில்லை. இந்த சூழ்நிலையில் அகதிகளை திரும்ப போக நிர்பந்திப்பது சர்வதேச நெறி முறைகளுக்கு எதிரானது. 
பறிமுதல் செய்யப் பட்ட படகுகள் திரும்ப ஒப்படைக்கப் பட வேண்டும். மீனவர் கைது என்பது அறவே நிறுத்தப் பட வேண்டும். இவைகள் நல்ல தொடக்கத்தின் அறிகுறிகளாக விளங்கட்டும்.; 
தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாநில அரசுக்கு முதலில் அதிகாரங்களை வழங்கி நம்பிக்கை ஏற்படுத்தட்டும் . 
பாராளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை இல்லாத சிறிசேன அரசால் என்ன முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் ? எல்லாவற்றையும் விட, சிறிசேன  எந்த உறுதி மொழியும் தராத நிலையில் ,மூன்றாந்தர குடிமக்களாக வாழ்ந்தாலே போதும் என்ற நிரந்தர நிலைமையை தமிழர்களுக்கு  உருவாக்கி விடுவார்களோ என்ற அச்சம்தான் இன்றைய நிலவரம். 

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)