விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித்துகள் தாங்கள் பகுதியில் அம்மன் சிலையை மாட்டு வண்டியில் கொண்டு சென்று வந்தததற்கு பதிலாக தேர் ஒன்று செய்து அதில் ஊர்வலம் நடத்த முடிவு செய்தார்கள். சாதி இந்துக்கள் நடத்தும் திருவிழாவில் தங்களுக்கு தகுந்த வாய்ப்பு கிடைக்காத நிலையில் அவர்கள் எடுத்த இந்த முயற்சிக்கும் சாதி இந்துக்கள் தடை விதிக்கவே காவல் துறையின் அனுமதியோடு திருவிழா நடத்த துணிந்திருக்கிறார்கள்.
பௌத்த மதம் மாறப்போவதாக அவர்கள் அறிவித்த பிறகு மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு கொடுக்க முனைந்திருகிறது. அதையும் மீறி தேரையும் தலித்துகளின் வீடுகளையும் பெட்ரோல் குண்டுகள் வீசி தீக்கிரையாக்கி இருக்கிறர்கள் சாதி வெறியர்கள்.
முடிவில்லாமல் தொடரும் இது போன்ற வக்கிர சம்பவங்கள் காட்டும் உண்மை என்ன???
இந்து மதம் என்று சொல்லப் படுகின்ற சனாதன மதம் என்கிற வர்ண தர்ம மதத்தில் சாதி ஒற்றுமை என்பது கானல் நீரே என்பதுதானா ?
இதைப் பற்றிப் பேசி ஒற்றுமை ஏற்படுத்தவோ தவறு செய்கிறவர்களை கண்டிக்கவோ மதத் தலைவர்களோ சாதித் தலைவர்களோ எந்த அரசியல் தலைவர்களுமோ யாரும் தீவிரமாக இல்லை என்பது தான் உண்மை.
ஆதிக்க சக்திகளின் எதிர்ப்பை சந்திக்க யாருமே தயாராக இல்லை.
அரசுகளும் பாராமுகமாகவே செயல் படுகின்றன . சென்னை உயர்நீதிமன்றம் கூட சாதி ஒற்றுமையை ஏற்படுத்த முடியாவிட்டால் திருவிழா நடத்த அனுமதி தராதீர்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறது என்றால் நிலைமை எவ்வளவு கேவலம்..
ஆதிக்க சக்திகளின் இடமும் இந்து மதத்தில் கேவலம்தான். . இவர்களுக்கு பிராமணர்கள் பூசை செய்யும் கோவில்களில் பூசை செய்ய அனுமதி கிடையாது. வன்னியர்கள் தங்களை அக்னி குண்டத்தில் இருந்து பிறந்தவர்கள் என்று இந்து புராணங்களைத்தான் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள்.
இந்து என்று அழைத்துக் கொள்கிறவர்கள் சாதிக்கு தாங்கள் மதத்தில் அல்லது வழிமுறையில் என்ன இடம் என்று விவாதித்து விடை காண முயற்சிக்க வேண்டும். கண்டும் காணாமலும் இருக்கிற இந்த பிரச்சினையை விரைவில் தீர்க்கா விட்டால் தமிழர் ஒற்றுமையும் நிரந்தரமாக பாதிக்கப் படும் . என்ன செய்யப் போகிறோம்????