பெயிலில் வந்தும் ஜெயலலிதா ஆட்சி ஜெயிலுக்குப் போனாலும் ஜெயலலிதா ஆட்சி தூக்கில் போடப்படும் சட்டம்?

சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கில் தண்டனை  பெற்ற ஜெயலலிதாதான் மக்களின் முதல்வர் என்றும் நடப்பது அவர் ஆட்சிதான் என்றும் எல்லா வகையிலும் காட்டிக் கொள்வதன் மூலம் நீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் ஏற்றுக் கொள்ள வில்லை என்பதை எல்லா அமைச்சர்களும் பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டனர்..

அதாவது பெயிலில் வந்தாலும் ஆள்வது ஜெயலலிதாதான் என்ற குற்றச்சாட்டை இதுவரை ஜெயலலிதாவும் மறுக்க வில்லை. அவரிடமிருந்து ஆட்சி நடத்துவது யார் என்பது பற்றி எந்த விளக்கமும் வரமில்லை.  முதல்வர் படம் , குடியரசு தின ஊர்வலம், அறை ஒதுக்குதல் , இரட்டை அதிகாரிகள் என்ற எந்த குற்றச்சாட்டுக்கும் விளக்கம் தர தேவையில்லை  என்றே எல்லாரும் கருதுகிறார்கள். மௌனமும் ஒரு ஒப்புதல் வாக்குமூலம்தான் .

          இவர்கள் திட்டமிட்டபடி       உச்சநீதிமன்றத்தின்  உத்தரவுபடி

ஒரு கால வரையறைக்குள் தீர்ப்பு வரும் வகையில் ஒரு அமர்வை கர்நாடகா உயர் நீதி மன்றம் அமைத்து அந்த மேல்முறையீட்டில் வெற்றி பெற்று  மீண்டும் முதல்வராகி திருவரங்கத்தில் மீண்டும் தேர்தல் கொண்டு வந்து  வெற்றி பெற்று அதன் பிறகுதான் தமிழக அரசின் எந்த புதிய திட்டமும் அறிவிக்கப் படும் என்பது அறிவிக்கப்படாத திட்டமாக இருக்கிறது.      அப்படி நடந்தால் அது ஒரு சரித்திர சாதனையாகவும்  உச்ச நீதி மன்றம் முதல் உயர் நீதி மன்றம் வரை நிலவுவது எல்லாருக்குமான சமநீதி தானா என்ற விவாதம் உச்சத்துக்குப் போகும் என்பதும்  வெளிப்படை.

         ஒருவேளை திட்டம்  தப்பிப் போய் மேல்முறையீட்டில் தண்டனை  உறுதிப் படுத்தப் பட்டால்  அதையும் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?    அல்லது உச்ச நீதிமன்றம் சொல்லும்வரை சிறையில் இருந்தாலும் ஜெயலலிதாதான் முதல்வர் என்று சொல்வார்களா? 
       சட்டத்துக்கு தூக்கு தண்டனை கொடுத்தாவது ஜெயலலிதாவை காட்சிப் பொருளாக்கி ஆட்சி நடத்துவோம் !      பணம் எங்கள் கையில் ! அதிகாரம் எங்கள் பையில் !      பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப போடும் மக்கள் இருக்கும் வரை  எங்களுக்கே வெற்றி என்று ஆனந்தக் கூத்தாடுவார்களா ? 
அதுசரி! எங்கே போய் ஒளிந்துகொள்வாள்  நீதி தேவதை ?

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)