‘ எங்களை விமர்சிப்பவர்களின் கண்களை தோண்டி எடுத்து வீசுவோம் கைகளை வெட்டி எறிவோம்,’ என்றெல்லாம் பேசி இருப்பவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி .
ஆளுவது மமதா பானர்ஜி. எப்படி நடவடிக்கை எடுப்பார். /
நரேந்திர மோடி என்னதான் கட்டுப் பாடுகளை விதித்தாலும் பா. ஜ.கவின் பல தலைவர்கள் தாறுமாராகத்தான் பேசி வருகிறார்கள். குறிப்பாக சாக்ஷி மகராஜ், நிரஞ்சன் ஜோதி போன்றவர்கள் முஸ்லிம்களை குறி வைத்து பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்றும் முறை தவறி பிறந்தவர்கள் என்றும் வன்முறைக்கு வித்திடும் வண்ணம் பேசி வருவதை வழக்கப் படுத்தி விட்டார்கள்.
தமிழ் நாட்டில் எச் .ராஜா முஸ்லிம் பெண்கள் பர்தா அணியக் கூடாது என்று பேசியிருப்பதும் ஒருவித பயங்கரவாதம்தான்..
இந்த வகை வெறுப்பு பேச்சுக்களை கட்டுப் படுத்தும் வரை முறைகளை வகுக்க வேண்டி தாக்கல் செய்யப் பட்டிருக்கும் போது நல வழக்கு ஒன்று உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. பிர வீன் தொகாடியா,, அக்பருதீன் ஒவைசி , ராஜ்தாக்கரே போன்றவர்களின் வெறுப்பு பேச்சுக்களை எப்படி கட்டுப் படுத்தப் போகிறீர்கள் என்று உச்ச நீதி மன்றம் கேட்டுள்ளது.
அதே நேரத்தில் தனக்கு எதிரான கருத்து உடையவர்களை வழக்குப் போட்டு அலைக்கழிக்கும் அரசுகளின் பிடியில் இருந்தும் பேசுபவர்களை காக்கும் பொறுப்பும் நீதி மன்றங்களுக்கு இருக்கிறது.
சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்து அதில் இந்திய தண்டணை சட்டத்தின் பிரிவுகள் 153, 153-A, 153-B, 295, 295A, 298 ,505 போன்ற பிரிவுகளின் மீது அரசுகள் வழக்கு தொடுக்க நிபந்தனைகள் விதித்து நெறிப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறார் . அது வரும் ஜூலை மாதம் விசாரணைக்கு வரும் என எதிர் பார்க்கப் படுகிறது.
நூற்றுகணக்கான வழக்குகளில் நீதிமன்றங்கள் வன்முறை பேசியவர்களை தண்டித்திருக்கிறது. ஆனாலும் வன்முறைப் பேச்சுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
மதம் இனம் , மொழி தொடர்பான பல பிரச்னைகளில் மாறுதல்கள் அவசியம் தேவை. மாற்றங்களை வலியுறுத்தி பேசும்போது ஒருசிலரின் ஆதிக்கத்தின் ஆழம பற்றி பேசத்தான் வேண்டும். அதைக்கூட கொள்கை வழி நின்றுதான் பேச வேண்டுமே தவிர தனிப பட்ட முறையில் தாக்கிப் பேச யாருக்கும் உரிமை இல்லை.
கொடுமை என்னவென்றால் எந்த ஆதிக்கத்தை எதிர்த்து போராடுகிரார்களோ அவர்கள் மீதே ஆதிக்க சக்திகள் நீதி மன்றங்கள் துணை கொண்டே தடை யாணை பெறுவதுதான். .
—
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)