தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் சட்ட விரோதமாக அபூர்வ ரக தாதுக்களான கார்னெட் , சிர்கான், ருடைல், மாக்னசைட் போன்ற ஆயிரக்கணக்கான கோடிகள் பெருமானமுள்ள தாது மணலை வி வி மினரல்ஸ் மற்றும் டிரான்ஸ் வேர்ல்ட் கார்ணட் இந்தியா கம்பெனி இரண்டும் தோண்டுவதை ஆய்வு செய்ய ககன் தீப் சிங் பேடி ஐ ஏ எஸ் தலைமையில் ஒரு விசாரணை கமிட்டியை 2013 செப்டம்பரில் அரசு அமைத்தது.
இந்த விசாரணையைதான் உயர் நீதி மன்ற நீதிபதி டி.ராஜா தள்ளுபடி செய்ததுடன் இந்த விசாரணையை வினோத் குமார் சர்மா என்ற ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு நடத்தவும் உத்தரவு இட்டிருந்தார்.
இதற்கு முன்பு நீதிபதி சி. எஸ் கர்ணன் , இந்திய சுரங்க மையத்தின் ( Indian bureau of Mines ) இரண்டு கம்பனிகளின் உரிம ரத்து ஆணைகளை தனது 32 தீர்ப்புகளில் ரத்து செய்திருந்தார்.
அதுவும் மத்திய அரசின் வாதங்களை கேட்காமலும் மத்திய அரசின் மையம் தனது எதிர் வாதுரையை தாக்கல் செய்யும் முன்பும்.
இந்த இரண்டு உத்தரவுகளையும் உயர்நீதிமன்ற பெஞ்ச் நிறுத்தி வைத்தது. பல்வேறு இலகாக்களில் இருந்து 230 பேர் பணியாற்றும் வேலையில் விசாரணையின் தலைமை அதிகாரி மட்டும் ஏதும் செய்து விட முடியாது என்று வாதிட்ட அரசின் நிலைபாட்டை பெஞ்ச் ஏற்றுக்கொண்டது.
30,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் என்றும் ஏறத்தாழ ஆண்டுக்கு 30,000 கோடி வருவாய் பாதிக்கப் படும் என்றும் வி வி மினரல்சின் இயக்குனர் சுப்ரமணியன் கூறியிருக்கிறார்.
ஜெயலலிதா அரசு பொறுப்பேற்ற உடனே தாது மணலை ஏன் அரசே ஏற்றுமதி செய்யக் கூடாது என ஆய்வு செய்யப் போகிறோம் என்ற அறிவிப்பின் இறுதி நிலை என்ன என்பது தெரியவில்லை.
இந்த தாதுக்கள் தான் கடல் அரிப்பை தடுக்கும் சக்தி வாய்ந்தவை என்றும் இந்த மணல் அள்ளும்நடவடிக்கைகளால் கடல் நீர் கிராமங்களில் புகுந்து குடிநீரை பாழ் படுத்தி விடுகின்றன என்றும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
வேலை வாய்ப்பு இழப்பு , ஆயிரக்கனக்கான கோடிகளில் லாபம் என்கிறார்களே அதை அரசுக்கு கொண்டு வர ஏன் முயற்சிக்கவில்லை?
டாஸ்மாக் மூலம் மக்களின் எதிர்காலத்தை பாழாக்கி விலையில்லா பொருட்கள் வழங்கி விலையில்லா அறியாமையை வளர்க்கும் தமிழக அரசு தாது மணல் கொள்ளைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
கொடுமை என்னவென்றால் நீதிமன்ற தடையையும் மீறி தாது மணல் கொள்ளை தொடர்ந்து நடந்து வருவதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுவதுதான் !!!!
அப்படிஎன்றால் உண்மைக் குற்றவாளிகள் யார்???