நீதித்துறையே இன்று முகம் வெளிறிப் போய் கிடக்கிறது.
ஊழல் நீதிபதிகளை பட்டியலிட்ட வக்கீல்கள் செய்தது சரியா ? அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதிகள் மீது எந்த விசாரணையும் இல்லையே என்பது சரியா;?
போராடுகிறோம் என்று நீதிமன்றத்துக்குள் நுழைந்தது தவறு என்றால் அவர்கள் குறையை கேட்பதற்கு கூட நீதிபதிகள் தயாராக இல்லையே ஏன்?
சங்க அறையை காலி செய்யுங்கள் என்றும் பனிரெண்டு பேரை சஸ்பெண்டு செய்கிறோம் என்றும் நீதிபதிகளும் பார் கவுன்சிலும் முண்டா தட்டுகின்றன.
நீதிமன்ற புறக்கணிப்பு தவறு என்றால் எப்படி கவனத்தை ஈர்ப்பது ? எது செய்தாலும் விளக்கம் தர மாட்டோம் என்றால் எப்படி பிரச்சினை தீரும்?
எல்லாம் போகட்டும்! அரசியல் சட்ட பிரிவு 348 ( 1 ) ன் படி உச்ச நீதிமன்றத்திலும் உயர்நீதி மன்றதிலும் நீதிமன்ற மொழி ஆங்கிலம். பிரிவு 348 ( 2 ) ன் படி குடியரசுத் தலைவரின் முன் அனுமதியோடு ஆளுநர் அந்தந்த மாநில மொழிகளை நீதிமன்ற மொழியாக அனுமதிக்கலாம் .
இந்த பிரிவின் படி உத்தரபிரதேசம் மத்தியபிரதேசம் பீகார் , ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அனுமதி பெற்று உயர்நீதி மன்ற மொழியாக இந்தி பயன்பாட்டுக்கு வந்து விட்டது.
இதே உரிமை தமிழ் உள்ளிட்ட இதர மொழிகளுக்கு உண்டா இல்லையா?
இந்த வேறுபாட்டை களைய வேண்டிய கடமை தமிழக அமைச்சரவைக்கும் உண்டல்லவா?
ஆனால் அமைச்சர் வேலுமணி உச்ச நீதி மன்ற இசைவை பெறுவதற்காக நீதிபதிகள் கொண்ட முழு அமர்வில் வைக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் 08.09.2015 தேதிய கடிதம் மூலம் தெரிவித்திருப்பதாக சட்ட மன்றத்தில் கூறினார்.
ஆனால் அரசியல் சட்டம் அதிகாரத்தை குடி அரசுத் தலைவருக்குதான் கொடுத்திருக்கிறது. இதில் உச்ச நீதிமன்றம் முழு அமர்வில் கூடி மாற்று கருத்தை தெரிவித்தால் அது சட்ட பூரவமாக இருக்குமா?
இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு மாநில அரசு ஆளுநரிடம் பேசி குடியரசு தலைவரிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் இல்லையேல் வெளியேறவும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
நீதித்துறை தன்னை சுத்தப் படுத்திக்கொள்ள வேண்டிய தருணம் இது.
மாநில அரசு மத்திய அரசிடம் பாரத்தை போட்டு விட்டு ஒதுங்கிக் கொள்ள முடியாது.
உயர் நீதி மன்றத்தில் தமிழ் அலுவல் மொழியாக ஆகும் நாளே கூட்டாட்சி உண்மையாக மலரும் நாள். !!!!