ஜெயலலிதாவை ஜெட்லி சந்தித்தது தவறா?

நான்காண்டு சிறை தண்டணை பெற்ற , முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த , தற்போது உச்ச நீதி மன்ற உத்தரவின் பேரில் ஜாமீனில் வெளியில் உள்ள  , கர்நாடக உயர்நீதி மன்ற சிறப்பு அமர்வில் மேன்முறையீட்டை நடத்திக் கொண்டு இருக்கிற ஜெயலலிதாவை , மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்து நாற்பது நிமிடம் தனியாக பேசிவிட்டு வந்தது, கலைஞர் , மருத்துவர் ராமதாசு  ,மற்றும்  இடது கம்யூனிஸ்ட் களின் கண்டனத்தை கிளப்பியிருக்கிறது..

            ஊழலுக்கு எதிரானவர்கள் என்று தங்களை பிரகடனப் படுத்திக் கொண்டுள்ள பா.ஜ.க.வினர் ஊழல குற்றத்தில் தண்டிக்கப் பட்ட ஒருவரை சந்திப்பது சட்டப்படி வேண்டுமானால் தவறில்லாமல் இருக்கலாம். 
தார்மீக நியாயப் படி ? 
மக்கள் மன்றத்துக்கு இவர்கள் பதில் சொல்ல கடமை பட்டவர்கள் என்பதில் சந்தேகமில்லை. 
முன்பு ரவி சங்கர் பிரசாத் பார்த்து சென்றதால் ஜெயலலிதா தண்டனையில் இருந்து தப்பி விடவில்லை. 
எனவே ஜெட்லி வருகையால் மேன்முறையீடு  விசாரணை பாதிக்கப் படும் என்பது அல்ல பிரச்சினை. . நீதித்துறை அவ்வளவு பலவீனமாகவும் இல்லை. 
பாராளுமன்ற மேலவையில் ஆதரவு தேவை என்றால் அதை வெளிப்படையாக கோருவதில் என்ன தயக்கம். ? 
ஜெட்லி பதவிக்கு வந்தவுடன் ஜெயலலிதாவின்  பதினெட்டு ஆண்டு நிலுவையில் இருந்த வருமான வரி வழக்கு சுமுகமாக முடிக்கப் பட்டது என்பது உண்மைதானே.!
சி.பி.ஐ. மத்திய அரசின் கைப்பாவையாக இயங்குகிறது என்ற குற்றச்சாட்டு வலுவாக உள்ளது. 
மமதாவாக இருந்தாலும் முலாயமாக இருந்தாலும் மாயாவதியாக இருந்தாலும் சி.பி.ஐ.யை பயன்படுத்தி பணிய வைக்கும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 
அந்த வகை நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த சந்திப்பும் அமைந்து விடக் கூடாது. 
திரைமறைவு பேரங்கள் ஏதும் இல்லாத பட்சத்தில் சந்திப்பை வெளிப்படையாக நடத்தி விபரங்களை வெளியிடுவதன் மூலம் ஊகங்களை தவிர்க்கலாமல்லவா?

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)