சென்னை மௌலிவாக்கத்தில் 28.06.2014 அன்று 61 உயிர்களை காவு வாங்கிய 11 மாடி கட்டிட விபத்து அதுவரை தமிழகம் கண்டிராத ஊழலின் வெளிப்பாடு.
அப்ரூவல் தந்த சி எம் டி ஏ வில் நிகழ்ந்த ஊழல் தான் இந்த விபத்துக்கு காரணம் என்ற சந்தேகம்தான் எல்லார் மனதிலும் இருந்தது. அங்கு நடந்த ஒவ்வொரு நகர்வும் ஆய்வு செய்யப் பட வேண்டியவை.
முடிந்த வரை உண்மை வெளி வராத வாறு அ தி மு க அரசு பார்த்துக் கொண்டது. சி பி ஐ விசாரணைக்கு அரசு ஒப்புக்கொள்ளவில்லை.
தானே ஒரு கமிஷனை நியமித்து , அதன் அறிக்கையை வெளியிட மறுத்து, பின் உயர் நீதி மன்றம் தலையிட்டு,, அதனால் வெளியிட்டு , அதையும் விவாதிக்க மறுத்து , பக்கத்தில் இருந்த இன்னொரு பதினோரு மாடி கட்டிடத்தையும் இடிக்க மறுத்து,
பின் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அதன் பின் ஒப்புக்கொண்டு ஒரு வழியாக நவம்பர் இரண்டாம் தேதி முன்னிரவில் இடிக்கப் பட்டது.
இந்த நீதியை வாங்கிட வேண்டி எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட எத்தனை பேர் நீதிமன்றங்களின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டி இருந்தது.
எத்தனை அநியாயங்கள் நீதிமன்ற தலையீடு இல்லாமல் கோலோச்சி வருகின்றன.
கட்டிடம் இடிக்கப் பட்டு விட்டது. அதனோடு சேர்ந்து நியாயமும் புதைக்கப் பட்டு விடக் கூடாது என்பதே நமது கவலை.
இத்தனை நடந்திருக்கிறதே, இதுவரை யார் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு தண்டிக்கப் பட்டிருக்கிறார்.?
அரசின் எல்லா ஆவணங்களையும் சரி பார்த்தே கடனில் வீடு வாங்கிய அப்பாவிகளின் கதி என்ன?
இதுதான் எல்லார் மனதிலும் தொக்கி நிற்கும் கேள்வி.
பிரச்னை நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் நியாயம் கிடைக்கும் என்று நம்பலாம். ஆனால் அதற்கும் அரசு துணை நிற்க வேண்டுமே?
வீடு வாங்கியவர்களுக்கு மனையில் இருக்கும் பிரிபடாத பங்கு உரிமை எந்த விதத்திலும் அவர்களின் இழப்பை ஈடு கட்டாது.
தவறு செய்தவர்கள்தான் அவர்களின் இழப்பை ஈடு கட்ட வேண்டும். அல்லது அவர்கள் சார்பில் அரசு ஈடு கட்ட வேண்டும்.
அடுத்து இனி இவ்விதம் நிகழாதவாறு அனுமதி தரும் விதிகளில் கடுமை காட்ட வேண்டும்.
தமிழக அரசு இன்று இருக்கும் துயர நிலையில் இதெல்லாம் சாத்தியமா???
This website uses cookies.