தேசத்தந்தை என்று நாடே போற்றினாலும் ஆளும் பா ஜ க வுக்கும் அதன் குரு ஆர் எஸ் எஸ் க்கும் அவர் என்றுமே ஆகாதவர்தான்.
கோட்சே இந்து மத வெறியர் என்பதும் அதனால் ஆர் எஸ் எஸ் அமைப்பு அவர் மீது கரிசனம் கொள்வதும் இயற்கை. இந்து மகா சபை வேறு நாங்கள் வேறு என்று எவ்வளவுதான் மறுத்தாலும் நம்புவதற்குத்தான் ஆள் இல்லை.
ரூபாய் நோட்டில் காந்தியடிகள் படத்துடன் இந்து மத குறியீடாக எதை புகுத்தலாம் என்பதுதான் இவர்கள் சிந்தனை.
சட்டிஸ்கர் நகரில் ஒரு விழாவில் பேசும்போது அமித் ஷா காந்தியடிகள் பற்றி குறிப்பிட்டார். வெறும் சுதந்திரம் பெறுவதற்காக மட்டுமே காந்தி உருவாக்கியதுதான் காங்கிரஸ் என்ற அமித் ஷா மேலும் பேசும்போது காந்திஜி ஒரு சாதுர்யமான பனியா என்று குறிப்பிட்டார்.
பனியா என்பது குஜராத்தில் ஒரு வணிக சாதிப்பெயர். தமிழ்நாட்டில் செட்டியார் என்பது மாதிரி . நாடே போற்றி வணங்கும் ஒரு தலைவரை அவரது சாதிப் பெயரை குறிப்பிட்டு விமர்சிப்பது என்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இதை திமிர் வாதம் என்பதா? அதிகார போதை தந்த திமிர் என்பதா?
சாதி பெயரை சொல்லி காந்தியடிகளை இழிவு படுத்துகிறார்கள். அவர் தலைவர் அல்ல. ஒரு சாதாரண வியாபார சமூக பிரமுகர் என்பது அவர்கள் எண்ணம் .
பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு அமித் ஷா வருத்தம் தெரிவிக்க மறுத்து விட்டார்.
நாடு முழுதும் கண்டன குரல்கள் எழுந்திருக்கின்றன. ஆனால் அமித் ஷாக்கள் திருந்த மாட்டார்கள்.
சுதந்திர இந்தியாவில் ஆட்சியாளர்களால் காந்தி இழிவு படுத்தப் படுவது இதுதான் முதல் முறை.
காங்கிரசை கலைக்க சொன்னார் காந்தி என்று சொல்லி விட்டு காங்கிரசை விமர்சிக்க ஒரு கருவியாக காந்தியை பயன்படுத்துவது மிக மோசமான நடத்தை.
காந்தியடிகளை பற்றி பா ஜ க கொண்டிருக்கும் கருத்துக்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் . அவரை இழிவுபடுத்தும் உரிமயை யார் அவர்களுக்கு கொடுத்தது. ?
அமித் ஷா போன்றவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதில் ஒரு ஆச்சரியமும் இல்லை. சங்கப் பரிவாரங்கள் எல்லாமே இப்படித்தான். மறைந்திருக்கும் உள் நோக்கத்தை வெளிக்காட்டாமல் செயல்படுவதில் வல்லவர்கள்.
அம்பேத்கரை போற்றிக் கொண்டே தலித் சமூகத்தை எப்படி அடிமைப் படுத்திக் கொண்டே அவர்களை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பது என்பதை ஒரு கலையாகவே நடத்தி வருபவர்கள் ஆயிற்றே .
சுய ரூபத்தை வெளிப்படுத்திய வரை அமித் ஷாவிற்கு நன்றி . அடையாளம் கண்டு கொள்ள மக்களுக்கு ஒரு வாய்ப்பு.