வெள்ளைக்காரன் காலத்தில் 1944 ல் பாதிரியார்கள் கன்னியாஸ்திரிகள் வருமான வரி விலக்கு பெறும் விதத்தில் உத்தரவிடப்பட்டது. அதை தொடர்ந்து 1977 ம் ஆண்டில் வரி விதிப்பு வாரிய செயலாளர் ஒரு சுற்றரிக்கையும் வெளியிட்டார்.
காரணம் அவர்கள் வாழ்நாள் முழுதும் இறைபணிக்காக அர்பணித்து வாழ்பவர்கள். அவர்கள் சொத்து வாங்கவும் முடியாது. வாங்கினாலும் பின்னர் தானாக திருச்சபைக்கு சொந்தமாகிவிடும் . ஊதியத்தை கூட முழுவதையும் பயன் படுத்திக் கொள்ள முடியாது என்றெல்லாம் காரணம் சொல்லப் பட்டது.
அதை மீறி விலக்குப் பெற்றவர்கள் பட்டியலில் இவர்கள் இல்லை என்ற காரணம் காட்டி வரி விதித்ததை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கில் சென்னை உயர் நீதி மன்றம் சுற்றறிக்கையை முதன்மை ஆணையர் மதித்து நடக்க வேண்டும் என்றும் வரி விதிப்பு ஆணையை ரத்து செய்வதாகவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இந்த உத்தரவு எல்லா மதங்களுக்கும் பொருந்துமா என்பது விளக்கப் படவில்லை.
எல்லா மதங்களிலும் தங்கள் வாழ் நாட்களை இறைப்பணி க்கு அர்ப்பணிப்பவர்கள் இருக்கிறார்கள்.
தங்கள் சொத்துக்களை தங்களுக்கு பிறகு இறைப்பணிக்கு கொடுப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வருமானத்திற்கு விலக்கு உண்டா?
எல்லா மதங்களையும் நாங்கள் சமமாக நடத்துகிறோம் என்று அரசு சிந்திக்க வேண்டும்.
வரைமுறைகளை வகுக்க வேண்டும்.
அது சரி . இரண்டரை லட்சம் வரை இப்போது வருமான வரி கிடையாது. அதாவது மாதம் இருபதாயிரம். அதற்கும் மேலா பாதிரியார்கள் சம்பளம் பெறுகிறார்கள்?
பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். அவர்கள் தேவைகளை தேவாலயமே ஏற்க வேண்டும் .
புத்த மதத்திலும் இதுபோலவே பிட்சுக்களின் தேவைகளை மடமே ஏற்றுக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது.
எந்த சட்டமும் மதங்களுக்கிடையே பார பட்சம் காட்டக் கூடாது. அரசு விரிவான அறிக்கை தர வேண்டும். குழப்பத்தை தீர்க்க வேண்டும்.
நாத்திகத்தையும் மனித நேயத்தையும் வளர்க்க வாழ்நாளை அர்ப்பணிக்கும் அமைப்புகளுக்கும் தொண்டர்களுக்கும் இந்த விலக்கு உண்டா என்பதையும் தெளிவு படுத்தினால் நலம் .