விவசாயிகள் போராட்டத்தை கண்டுகொள்ளாத மோடி அரசு ?!

modi-farmers

பத்தொன்பது நாட்களாக தமிழக விவசாயிகள் புது டில்லியில் தங்கியிருந்து பலவிதமான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

மோடி அரசு கண்டுகொள்வதாக தெரியவில்லை.

நதிநீர் இணைப்பு  கட்டுபடியாக கூடிய விளைபொருள் விலை நிர்ணயம்  கடன் நிவாரணம் போன்ற முக்கிய கோரிக்கைகள் அகில இந்தியாவுக்கும் பொருந்துபவை.

நாற்பதாயிரம் கோடி விவாரணம் கேட்டால் தமிழகத்திற்கு  இரண்டாயிரம் கோடி காலம் தாழ்த்தி  வழங்குகிறது மத்திய அரசு.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரினால் எல்லா நதிநீர் தாவாவையும் ஒன்றிணைத்து ஒற்றைதீர்ப்பாயம் அமைப்போம் என்கிறார்கள்.

பல ஆண்டுகள் போராடி பெற்ற இறுதி தீர்ப்பை அமுல்படுத்த மோடி அரசு தயாராக இல்லை.

புது அமைப்பு எப்போது அமைப்பது ?  அது எப்போது எந்த தாவாவை விசாரித்து தீர்ப்பளிக்கும்?

புது அமைப்பு வரட்டும்.    ஆனால் வழங்கப் பட்ட தீர்ப்பை அமுல்படுத்துவதற்கு அது தடையாக இருக்காது என்று சொல்ல மத்திய அரசு தயாராக இல்லை.

எந்த தீர்ப்பும் எப்போதும் நிலையானது இல்லை.    குறிப்பிட்ட காலத்துக்கு பின் அது மறு பரிசீலனைக்கு உட்பட்டதே.    அதுவரை இன்று பெறப்பட்டிருக்கும் தீர்ப்பை அமுல்படுத்துவது தானே முறை.

ஐம்பது பெரு நிறுவனங்களின்  ஒண்ணேகால் லட்சம் கோடி கடனை வாராக் கடனாக அறிவித்து நிவாரணம் வழங்கிய மோடி அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய ஏன் தயாராக இல்லை ?

ஹைட்ரோ கார்பன்  மீத்தேன்  ஷே ல் என்று விவசாய நிலங்கள் இருக்கும் பகுதிகளில் இயற்கை எரிவாயுவை தனியார் நிறுவங்களுக்கு தாரை வார்க்கும்  மோடி அரசு விவசாயம் பாதிக்கும் என்பதை பற்றி கவலைப் படவில்லை.

விவசாயிகள் கோரிக்கையை மாநில அரசுதான் வழங்க வேண்டும் என்கிறார் பொன்னார்.   அதிகாரம் மத்திய அரசின் கைகளில்.    மாநில அரசு எப்படி வழங்கும்?

தமிழகத்தை வஞ்சிப்பதை கொள்கையாகவே கொண்டு செயல்படும் மோடி அரசின் சுய ரூபத்தை தமிழர்கள் மறக்கவே மாட்டார்கள்.