இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம தர முயன்ற தாக தினகரன் மீதான வழக்கில் பல மர்ம முடுச்சுக்கள் அவிழ்க்கப் பட வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும். அவிழ்க்கப் படாமலேயே கூட போகலாம். அதன் பெயர் தான் மோடி வித்தை.
அதிமுக இரண்டாக உடைந்தது என்பதே தவறு. பெரும்பான்மை நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம்தான் இருக்கிறார்கள். இதை அளவுகோலாக வைத்துதான் சமாஜ்வாதி கட்சி பிரச்னையின் போது சைக்கிள் சின்னத்தை அகிலேஷ் யாதவுக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கியது. அந்த அளவுகோளில் சாதாரணமாக இரட்டை இலை சின்னம் அவர்களுக்கே கிடைத்திருக்க வேண்டும்.
அடிப்படை உறுப்பினர்கள் மட்டுமே பொதுசெயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது வேறு பிரச்னை. இரண்டையும் சேர்த்து குழப்பி பிரச்னையை ஏற்படுத்தியது தேர்தல் கமிஷன்.
தானாகவே கிடைத்திருக்க வேண்டிய சின்னத்தை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து பெற தினகரன் முயற்சித்தார் என்பதே கேலிக்குரிய குற்றச்சாட்டு. அவர் அப்படிப்பட்டவர்தான் என்பது வேறு. ஆர் கே நகர் தேர்தலில் அவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார் என்பது எல்லாரும் அறிந்த உண்மை. ஜெயலலிதா என்ன பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றாரா? பணம் கொடுக்கப் பட்டதை தடுக்க முடியவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது தேர்தல் கமிஷன்.
எல்லாம் போகட்டும். ஒரு குற்றம் எப்போது தண்டிக்கப் பட வேண்டிய ஒன்றாக முழுமையடைகிறது. ?
குற்றம் புரிய வேண்டும் என்ற மனநிலை உருவாக வேண்டும் , குற்றம் புரிய தேவையான தயாரிப்புகளை செய்ய வேண்டும் , குற்றம் புரிய முயற்சிக்க வேண்டும் , குற்றத்செயலை நிகழ்த்த வேண்டும் . இந்த நான்கு நிலைகளை தாண்டிய பிறகுதான் ஒரு செயல் தண்டிக்கத் தக்க குற்றமாகும்.
தேர்தல் கமிஷனை லஞ்சம கொடுத்து வாங்க முயன்றால் அந்த தேர்தல் கமிஷன் அதிகாரி யார்? அவரிடம் யார் தொடர்பு கொண்டார்கள்? அதற்கு அவர் ஒப்புதல் கொடுத்தாரா? ஒப்புதல் கொடுத்திருந்தால் அவரும் இந்த குற்றத்தில் சம்பத்தப்பட்ட ஒரு குற்றவாளியாகிறார். ஏன் அவர் பெயரை வெளியிட வில்லை?
தேர்தல் கமிஷன் அதிகாரியை சம்பத்தப் படுத்தாமல் தினகரனை இந்த வழக்கில் குற்றவாளியாக காட்டவே முடியாது.
ஹவாலா மூலம் பணம் பரிவர்த்தனை என்பது சட்ட விரோதமானது. ஆனாலும் பல நூற்றாண்டுகளாக அமுலில் உள்ளது. ஒழிக்க முடியுமா என்பது விபசாரத்தை ஒழிக்க முடியுமா என்பதை ஒத்தது. தண்டிக்கலாம். ஆனால் ஒழிக்கவே முடியாது.
இதுவரை வெளிவந்துள்ள தகவல்கள் அடிப்படையில் இன்னும் குற்றம் உருவாகவே இல்லை. எப்படி நீதிமன்றம் இதையெல்லாம் அனுமதிக்கிறது என்பது வேறு புதிர்.
நம்பக்கூடிய வகையில் எதையுமே தேர்தல் கமிஷன் நடந்து கொள்ளவில்லை.
பா ஜ க வின் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு தேர்தல் கமிஷன் துணை போவது எல்லாருக்கும் தெரிகிறது. அவரரும் அவரவர் அரசியலுக்கு தகுந்தாற்போல் ஆதரிக்கவோ கண்டிக்கவோ செய்கிறார்கள்.
கடைந்தெடுத்த ஒரு ஏமாற்றுப் பேர்வழியை , சுகேஷ் சந்திரசேகர் என்ற நபரை, கையில் எடுத்துக்கொண்டு இந்த அரசியல் நாடகத்தை மோடி அரசு நடத்துவதுதான் சகிக்க வில்லை. வங்கிகளை பல கோடிகளில் ஏமாற்றியவன், தனக்கும் தினகரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஏன் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்க வேண்டும்?
தமிழகத்தில் காலூன்ற மோடியும் அமித் ஷாவும் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு ஒரு சின்ன ஆரம்பம்தான் தினகரன் கைது – வழக்கு காட்சிகள்.
பார்க்கலாம் – இந்த நாடகம் இன்னும் எத்தனை திருப்பங்களை உருவாக்கும் என்று?
This website uses cookies.