உ பி யில் மோடியின் வெற்றி ஒரு அபாய அறிவிப்பு ??!!

narendra-modi
narendra-modi

முதல்வர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்காத நிலையில் ,

நான்கு கோடி  முஸ்லிம் களில் ஒருவரைக்கூட வேட்பாளராக அறிவிக்காமல் ,

மாயாவதியின் ஜாதவ் சமூக மக்களுக்கு எதிரான பட்டியல் வகுப்பினரை ஒன்று சேர்த்து

அகிலேஷ் யாதவின் யாதவ் மக்களுக்கு எதிரான இதர பிற்பட்ட மக்களை  ஒன்று சேர்த்து,

சாதியம் கோலோச்சும் இந்துத்துவா உணர்வுகளை தூண்டி விட்டு  ,

மத்திய அரசின்  அதிகார பலத்தை  பண பலத்தை பயன்படுத்தி,

மூன்றில் நான்கு பங்கு  இடங்களை பெற்று வரலாற்று வெற்றியை பெற்று விட்டார் பிரதமர் மோடி.

பாஜக வின் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றியாக இதை எடுத்துக் கொள்ள முடியாது.

தனிப்பட்ட மோடி என்ற மனிதர் புனிதராக சித்தரிக்கப்பட்டு அடுத்த பாராளுமன்ற  தேர்தல் எப்படி இருக்கும் என்பதற்கு முன்னோடியாக உ பி தேர்தல் நடத்தப் பட்டு இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற மாபெரும் தோல்வியை ஒரு பாடமாக எடுத்ததுக்  கொள்ளாமல் தந்தையும் மகனும் நடத்திய குடும்ப அரசியல் நாடகங்கள் மக்கள் மத்தியில் பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதைக்கூட உணராமல் போனது சமாஜ்வாதியின் தோல்விக்கு ஒரே காரணம்.

மாயாவதியும் கூட நான்கில் ஒரு பங்கு இடங்களை முஸ்லிம்களுக்கு தந்தும் கூட வெற்றிபெற முடியாதது மட்டுமல்ல பாஜக வின் தந்திரங்களை எதிர்கொள்ள தயாராக இல்லாமல் மத சார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்க அவர் முனையவேயில்லை.

ஆக இப்படியே போனால் நாடு இந்துத்துவ சர்வாதிகாரத்திற்கு ஆட்பட்டுவிடும் என்ற அச்சம் வருவதை தவிர்க்க முடியாது.

அடுத்து , இதே தந்திரங்கள் தமிழ்நாட்டிலும் அரங்கேற்றப் படலாம் என்ற அச்சம்தான் நமக்கு.

ஏனென்றால் இங்குதான் தமிழன் ஏமாறத் தயாராக இருக்கிறான்.  காட்டிகொடுக்க தயாராக இருக்கிறான். மண்டியிட தயாராக இருக்கிறான். சாதியால் பிளவுபட்டு நிற்கிறான். பதவிப் பசி கொண்டு அலைகிறான்.    தாய்  மொழியை  காக்கும் திறனற்று இருக்கிறான்.

எல்லாவற்றுக்கும் மேலாக   ஒருபோதும் சக தமிழனை தலைவனாக ஏற்றுக் கொள்ளாத நல்ல உள்ளம இவனுக்கு.

இப்படியெல்லாம் தங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் சக்தி எது என்பதுகூட இவனுக்கு தெரியாது.      அந்த சக்திதான் தனக்கு உற்ற நண்பன் என்ற மாய உணர்வில் மயங்கி கிடக்கிறான்.

இது  போதாதா வஞ்சக  வலை விரிப்போருக்கு .

ஆனால் வஞ்சகமும் பொய்மையும் என்றும் நிலையான வெற்றியை பெற முடியாது என்ற  வரலாற்று உண்மை ஒருபோதும் மாறாது.

மோடி பிராமணர் அல்ல என்ற பிரச்சாரம் இங்கு எடுபடாது.    ஏனென்றால் அவர் பிராமணியத்தின் பிரதிநிதி யாக செயல் படுவதால்தான் தலைமையில் நீடிக்க அனுமதிக்கப் படுகிரார் என்பது எல்லாருக்கும் தெரியும்.

இந்தியாவில் அவுரங்கசீப்  அசோகர், குப்தர்  சாம்ராஜ்யங்கள் கூட தக்காண பீடபூமி வரையில் தான் தங்கள் ஆட்சியை நீட்டிக்க முடிந்தது.      தமிழகத்தில் ஒருபோதும்  எந்த சாம்ராஜ்யமும் நுழையவில்லை.   அதை உடைத்தவர்கள் வெளிநாட்டு வெள்ளையர்கள்.     அதுபோல் ஒருபோதும் இந்துத்துவ சக்திகள் இந்தியாவின் எந்த  பகுதியில் வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் ஒரு போதும் வெற்றி பெற முடியாது.

வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம் என்ற  உறுதியைத்தான்      தமிழர்களுக்கு இந்த மதவாதத்தின் வெற்றி  அளிக்க வேண்டும்.

அளிக்கும்.