தேசதுரோக குற்றப் பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.
படைப்பாளிகள் மீது இந்த பிரிவில் வழக்கை பதிவு செய்த பிறகு நாட்டில் பெரும் கண்டனங்கள் எழுந்தன. என்னென்னவோ செய்து பார்த்தும் நிலைமை மோசமாகி வந்தது.
இந்நிலையில் முசாபர்பூர் காவல் துறை சிறப்பு கண்காணிப்பாளர் மனோஜ் குமார் இந்த வழக்கில் கூறப்பட்ட புகார்கள் விஷமத்தனமானவை என்றும் அவற்றுக்கு போதிய ஆதாரம் இல்லை என்றும் விசாரணையில் தெரிய வந்ததால் அவர்கள் மீது பதியப் பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இப்போது கேள்வி? ஒரு காவல் துறை கண்காணிப்பாளருக்கு தெரியும் சட்டம் இதை பதிவு செய்ய உத்தரவிட்ட தலைமை நீதித்துறை நடுவருக்கு தெரியாதா? எதன் அடிப்படையில் வழக்கை பதிவு செய்ய உத்தரவிட்டார் அவர் என்பதையும் விசாரித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.
சாதாரணமாக எந்த குற்றத்தையும் விசாரித்து முடிவெடுக்க வேண்டிய கடமை காவல் துறைக்குத்தான் இருக்கிறது.
அது முதல் புகார் காவல் துறையிலேயே கொடுக்கப் பட்டிருந்தால் அதுதான் நடைமுறை. அவர்கள் விசாரித்து முடிவெடுக்கலாம். ஆனால் இங்கு புகார் நீதிமன்றத்தில் கொடுக்கப் பட்டு நீதிமன்றம் அதில் சொல்லப் பட்ட புகாரை படித்து அதன் பின் வழக்கை பதிவு செய்ய உத்தரவிட்டிருக்கிறது. மேலெழுந்த வாறு பார்த்தாலே குற்றம் நடந்த அறிகுறி தெரிந்தால் தான் விசாரிக்க வேண்டும்.
இந்த புகாரில் பிரதமருக்கு மனு கொடுத்து அதில் கும்பல் கொலைகளை விசாரியுங்கள். அது நாட்டுக்கு பெருத்த அவமானம் என்று புகார் சொல்லி இருக்கிறார்கள். விசாரித்து பதில் கொடுப்பதுஸ் பிரதமர் அலுவலகத்தின் கடமை. அவர்கள் இந்த மனு குற்றம் என்று சொன்னார்களா? பிரதமர் அலுவலகம் புகார் எதுவும் கொடுக்காத நிலையில் யாரோ ஒருவர் விளம்பரம் தேடி புகார் கொடுத்தால் அதை பதிவு செய்வீர்களா?
பாதிக்கப் பட்ட படைப்பாளிகளுக்கு என்ன நட்ட ஈடு கொடுப்பது ? யார் கொடுப்பது?
விளம்பரம் தேடி புகார் கொடுத்த வக்கீல் சுதிர்குமார் ஓஜா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொடுமை என்னவென்றால் அந்த வக்கீல் வழக்கை ரத்து செய்த கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை கோரி மீண்டும் புகார் கொடுத்திருக்கிறாராம்.
சட்டத்தை தவறாக பயன்படுத்தும் அவர்மீது வக்கீல்கள் சங்கம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தப் பிரச்னையில் பொதுமக்கள் கருத்து பொய்ப்புகாரை அடக்கி விட்டது என்பதுதான் மகிழ்ச்சிக்குரிய உண்மை.
This website uses cookies.