சபரிமலையில் பெண்களை  அனுமதிக்க தயார்! –கேரள அரசு!!!

ஐயப்பன் கோவிலில் 10   முதல் 50  வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி கிடையாது.

ஐயப்பன் ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதால் பெண்கள் அவர் அருகே கூட செல்லக் கூடாது என்று பாரம்பரியமாக நிலவி வரும் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து இந்த கட்டுப்பாட்டை கடைப் பிடித்து வருகிறார்கள்.

இதை எதிர்த்து இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் என்ற அமைப்பு அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஒரு பொது நல வழக்கை  உச்சநீதி மன்றத்தில் தொடுத்தது.

ஆஜ்மீர் தர்காவில் பெண்களை வழிபட அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற தர்கா நிர்வாகம் விசாரணையின்போது பெண்களை அனுமதிக்க  தயார் என்று கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

முந்தைய இடது சாரி அரசு அனுமதிக்கலாம் என்று போட்ட அவிடவிட்டை சென்ற காங்கிரஸ் அரசு மறுதலித்து பாரம்பரியம் நிலைக்கட்டும் என்று மறு அவிடவிட்டு  போட்டது.   இப்போது இடது சாரி அரசு மீண்டும் பதவிக்கு வந்து  விட்டதால் தனது முந்தைய அரசின் நிலைப்பாடே இப்போதும் தொடர்கிறது என்று இடது சாரி அரசு கூறிவிட்டது.

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு மத நம்பிக்கைகளில் நீதி மன்றம் உள்பட யாருமே கேள்வி கேட்க முடியாது என்று கூறுகிறது.  அதாவது அரசுக்கு இதில் கருத்துக் கூறும் உரிமையே இல்லை என்கிறது.

பரம்பரை அறங்காவலர் பந்தள அரச குடும்ப சார்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டுள்ளது.

வழக்கின் அடுத்த விசாரணை  அடுத்த ஆண்டு பிப்ருவரி இருபதாம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.    அப்போது விரிவான விவாதங்களுக்கு  பிறகு இந்த சீர்திருத்தங்களை கொண்டு வருவதா வேண்டாமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும்.

பிரம்மசாரிகளாக இருப்பவர்கள் தாயை வணங்க கூடாதா?   தாய் பிரம்மச்சாரி மகனை ,  சகோதரி ஒரு பிரம்மச்சாரி சகோதரனை நெருங்க கூடாதா?    தெய்வத்துக்கு இந்த மனித உறவுகள் பொருந்துமா?

அந்த இறைவன் பெண்களுக்கு அருள் பாலிக்க மாட்டாரா?

இறைவன் ஐயப்பன் இவர்களது கட்டுப்பாடுகளுக்கும் முடிவுகளுக்கும் கட்டுப் பட்டவரா?     இறைவனை கட்டுப்படுத்தும் அதிகாரம் மனிதர்களுக்கு உண்டா?

மாத விலக்கு ஆகும் மூன்று நாட்களை கணக்கில்  கொண்டே பெண்களை விலக்கி  வைக்கும் வழக்கம் அமுலுக்கு வந்திருக்க வேண்டும்.

சில காலத்திற்கு  முன் வரை அந்த மூன்று நாட்களும் பெண்களை ஊருக்கு  வெளியே தனியே ஒரு கட்டிடத்தில்தங்க வைக்கப் பட்ட காட்டுமிராண்டிதனமான வழக்கம் சில  ஊர்களில் அமுலில் இருந்து வந்ததை மறக்க  முடியுமா?

தங்கள் வசதிக்கும் நலத்துக்கும் ஏற்ற வகையில் மனிதர்கள் இறைவனையும் இறை நம்பிக்கையையும் பயன் படுத்தி வந்திருக்கிறார்கள் .

அந்த வகையில்தான் ஐயப்பன் கோவிலில் பெண்களை ஒதுக்கி வைக்கும் வழக்கமும் வந்திருக்க வேண்டும்..

இதுவரையில் நீதிமன்றங்கள் தான் இந்து மதத்தில் திருத்தங்களை கொண்டு  வந்திருக்கின்றன.      தானாக முன்வந்து எந்த சமயமும் எந்த சீர்திருத்தத்தையும் கொண்டு வந்ததில்லை.

உடன் கட்டை ஏறுதல்,   குழந்தை திருமணம் , பல தார மணம் போன்ற பல  தீமைகள்   பாரம்பரியம் சமய கோட்பாடு என்றெல்லாம் சொல்லி நியாயமாக்கப் பட முயற்சிக்கப் பட்ட போது  நீதிமன்றங்களால் அந்த தீமைகள்  தடுக்கப் பட்டன என்பதை மறக்க கூடாது.

இன்னமும் அந்த சக்திகள் சீர்திருத்தங்களை எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.     அவர்களையெல்லாம் மீறித்தான் மாற்றங்கள் வந்தன.   இனியும் வரும்.