மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 ( 3 ) ன் படி மதம் , சாதி , இனம், மொழி, அடிப்படையில் வேட்பாளரோ அவரது அங்கீகாரம் பெற்ற ஏஜெண்டோ வாக்குகளை கோரினால் அவரது செயல் ஊழல் எனப்படும் செயலாக கருதப் பட்டு அவரது தேர்தல் செல்லாது என அறிவிக்கப் படும் என்று உச்ச நீதி மன்ற ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சில் நான்கு நீதிபதிகள் பெரும்பான்மை தீர்ப்பில் தீர்ப்பு வழங்கி யது.
இந்த தீர்ப்பு செல்லுமா என்பதை விட எப்படி அமுல்படுத்துவார்கள் என்ற கேள்வி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
கட்சிகளே அப்படித்தான் இயங்குகின்றன. அகாலி தளம் சீக்கியர்களை குறிக்கிறது. கணக்கில் அடங்கா முஸ்லிம் கட்சிகள். அதே அளவில் கிறிஸ்தவ கட்சிகள். இந்து மகா சபா , இந்து ஏக்தா அந்தோலன் கட்சி , போன்ற மதத்தை பெயரிலேயே கொண்ட கட்சிகள் தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற்றவை.
திராவிட ,வங்காள,மகாராஷ்டிரா கன்னட என்றெல்லாம் பிராந்தியங்களின் பெயர்களில் கட்சிகள்.
மிசோ,நாகா , தெலுகு தேசம் என்று பிரதேச கட்சிகள்.
இவைகளெல்லாம் இந்த தடை செய்யப் பட்ட பெயர்களிலேயே இயங்குகின்றன. இவைகளை தடை செய்ய தேர்தல் கமிஷனால் முடியுமா?
எந்த தேர்தல் வழக்கும் அடுத்த தேர்தல் முடியும் வரை முடிந்ததில்லை.
தேர்தல் வழக்குகள் எல்லாம் எந்த விளைவையும் இதுவரை ஏற்படுத்தியதில்லை.
ஒன்றிரண்டு இருந்தாலும் அவைகள் எல்லாம் காலத்தில் செய்யப் பட்டவை அல்ல.
நியாயம் என்றளவில் மட்டுமே இந்த தீர்ப்புக்கு மரியாதை இருக்கும். நியாயத்தை எப்படி அமுல்படுத்துவது என்பதே கேள்விக்குறி?
வேட்பாளருக்கு சம்பந்தமில்லாமல் யாரோ ஒருவர் அப்படி பிரச்சாரம் செய்தால் அது எப்படி வேட்பாளரை பாதிக்கும் என்பதற்கும் விடையில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக மதம் சாதி இனம், மொழி போன்றவை மக்கள் மத்தியில் பயன்பாட்டில் உள்ளவை. அவை சம்பந்தமாக ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன. அவைகளை விவாதிப்பதிலும் அவைகளுக்கான தீர்வுகளை முன் வைப்பதும் எப்படி தவறு ஆகும்? அவைகளை நான் தீர்த்து வைப்பேன் என்பதும் கூட அவை சார்ந்த பிரச்சாரங்கள் தான். அது எப்படி ஊழல் ஆகும்?
இப்படி விடை கிடைக்காத , பல கேள்விகளை இந்த தீர்ப்பு எழுப்பியிருந்தாலும் , அமுல் படுத்துவது பற்றிய சந்தேகங்களுக்கு விடை தெரியா விட்டாலும் , இப்படி ஒரு தீர்ப்பு இருப்பது நல்லது என்பதே பெரும்பான்மை மக்களின் விருப்பம்.
இந்திய தண்டனை சட்டம் இருக்கும்போதுதானே இத்தனை குற்றங்களும் நடக்கின்றன. அதற்காக சட்டம் வேண்டாம் என்று விட்டு விட முடியுமா?
அதைப்போலவே இந்த தீர்ப்பும் இருக்க வேண்டியதே!!!
This website uses cookies.