ஷரியத் கவுன்சில் சட்ட விரோதம் என்ற உயர் நீதி மன்ற தீர்ப்பு சரியா?
முஸ்லிம்கள் தங்கள் சொத்து ,திருமண , பாக உரிமை போன்ற சிவில் உரிமைகளை பொறுத்த வரை தங்கள் முஸ்லிம் சட்டப்படி நடந்து கொள்ளும் உரிமைபடைத் தவர்கள்.
இது தொடர்பான பிரச்னை வரும்போது மசூதிகளில் இயங்கும் ஷரியத் கவுன்சில் மூலம் தீர்த்துக் கொள்கிறார்கள்.
அப்துல் ரஹ்மான என்பவர் தொடுத்த வழக்கில் தனது மனைவியை அண்ணா சாலை மசூதி ஷரியத் கவுன்சில் விவாக ரத்து செய்து மிரட்டி கையெழுத்து வாங்கியதாக வழக்கு தொடுத்தார்.
விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மசூதிக்குள் சட்ட விரோத நீதிமன்றம் இயங்குவதை அனுமதிக்க முடியாது என்று சொல்லி விட்டு காவல் துறைக்கு நடவடிக்கை உத்தரவிட்டது.
காவல் துறையோ கவுன்சில் மசூதிக்குள் செயல் படுவதால் உள்ளே சென்று நடவடிக்கைஎடுக்க முடிய வில்லை என்று தெரிவித்தது.
வழிபாட்டு தலங்களில் வழிபாடுதான் நடக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் தனிச்சட்டத்தை அமுல்படுத்திக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு இருப்பதை அவர்கள் எப்படி நிறைவேற்றிகொள்ளுவார்கள்?
மசூதிக்கு வெளியேதான் ஷரியத் கவுன்சில் செயல்பட வேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியுமா?
தனிச்சட்டம் என்ன சொல்கிறது என்பதை விளக்கும் ஒரு அமைப்பு செயல்படுவதை எப்படி எதிர்க்க முடியும்?
தனிச்சட்டம் கூடாது என்பது வேறு அதை அமுல் படுத்தும் அமைப்பு மசூதிக்குள் செயல் படக் கூடாது என்பது வேறு.
தனிச்சட்டம் தொடர்கிறவரையில் ஷரியத் கவுன்சில் செயல்படுவதை தடுக்க முனைவது சரியல்ல.
ஷரியத் கவுன்சில் எப்படி எங்கே செயல்பட வேண்டும் அதற்கு மேல்முறையீடு உண்டா என்பதை முஸ்லிம்களே தீர்மானத்துக் கொள்ள விட்டு விடலாம்.
வழக்கு தொடர்கிறது. எனவே விளக்கம் வேண்டும். தமிழக அரசு தெளிவு படுத்த கடமைப் பட்டிருக்கிறது.