இந்தித் திணிப்பை முறியடிக்க ஒரே வழி தமிழ் வழிக் கல்வியே??!!

hindi imposition

தேசிய நெடுஞ்சாலைகளில் மைல் கற்களில் ஆங்கிலத்தை அழித்து விட்டு இந்தியில் எழுதி வருகிறது மத்திய அரசு.

இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் நீடிக்கும் என்ற நேருவின் உறுதிமொழியை மீறுகிற செயல் இது.

சமஸ்கிருத வாரம் இந்தி வாரம் உலக இந்தி மாநாடு  ஐ நாவில் இந்தியை அலுவல் மொழியாக ஆக்க முயற்சி சமஸ்கிருத செய்தி வாசிப்பு என்று பல உதாரணங்களை காட்ட முடியும்.

தமிழ்நாடு வங்காளம் போன்ற சில மாநிலங்களை தவிர ஏனைய அனைத்து மாநிலங்களும் இந்தியை ஏற்றுக் கொள்வதிலோ படிப்பதிலோ பெருத்த ஆட்சேபணை கிளப்ப போவதில்லை.   ஏனென்றால் அந்தந்த மொழிகளில் சமஸ்கிருதம் இரண்டற கலந்து பிரிந்து செயல்படும் தன்மையை இழந்து விட்டன.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக தமிழும் தன் தனித் தன்மையை இழந்து சமஸ்கிருத ஆதிக்கத்தில் இருந்ததை திராவிடர் இயக்கம் தான் மீட்டுக் கொண்டுவந்தது.   இந்த உண்மை கூட தற்கால தலைமுறையால் உணர்ந்து கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை.    இப்போது  மீண்டும் இந்தி ஆதிக்கம்  செய்ய தலை எடுக்கிறது.

எல்லாம் அடி பணிந்து விட்டார்கள் நீ மட்டும்  ஏன் பணிய மறுக்கிறாய் என்று கட்டபொம்மனை ஆங்கிலேயன் கேட்டது போல் நம்மைப் பார்த்து இந்தி ஆதிக்கம் கேட்கிறது.

இவர்களை தடுக்கும் சக்தி தற்கால தமிழனுக்கு இருக்குமா என்ற கேள்வியை கேட்க வேண்டிய வேளை வந்து விட்டது.

இவர்களை எதிர்த்துக் கொண்டிருப்பதை விட இந்தி திணிப்பை எதிர்க்க ஒரே வழி தமிழ் மொழி வழிக் கல்வி மட்டுமே.

மற்ற மாநிலங்களில் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும்.    தமிழ் நாட்டில் தமிழர்கள் தங்கள் குழந்தைகளை தாய் மொழியில் கல்வி  கற்க வைக்க முடிவெடுக்க வேண்டும்.

வேலை வாய்ப்பு  கிடைக்காது என்ற பூச்சாண்டியை காட்டி தமிழ் மொழிக் கல்வியை தவிர்க்க வைக்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப் படும்.     அரசியல்வாதிகள் தங்கள் வீட்டுக் குழந்தைகளை இந்தி  படிக்க சொல்லி விட்டு மற்றவர்களை தமிழ் படிக்க சொல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழவே கூடாது.

அப்படி படித்து விட்டு வருபவனுக்கு அரசு வேலை  வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

தமிழ் மொழி வழியில் படித்தவனுக்கு  சலுகைகள் கொடுப்பது என்பது கடமை சார்ந்தது.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டி போராட்டம் தொடங்க வேண்டும் .

இந்தியாவில் இணைந்திருப்பதற்கும் தாய் மொழிக் கல்விக்கும் என்ன முரண்பாடு.

யார் ஆட்சிக்கு வந்தாலும்  தாய் மொழிக் கல்விக்கு முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ் பயிற்று மொழி . ஆங்கிலமோ இந்தியோ வேறு எந்த மொழியோ கற்க தடையில்லை என்ற கொள்கையில் தமிழர்கள் உறுதியாக இருந்தால் ஒழிய இந்தி  திணிப்பை  எதிர்க்கிறோம்  என்று குரல் கொடுப்பதில் எந்த பொருளும் இல்லை.