எடப்பாடி பழனிசாமி முதல்வராக நீடிப்பது இன்று நடக்கும் சட்ட மன்ற வாக்கெடுப்பில் தெளிவாகிவிடும்.
திமுக காங்கிரஸ் அணியின் 98 வாக்குகளும் ஓ பி எஸ் அணியின் 11 வாக்குகளும் சேர்த்தும் கூட நம்பிக்கை வாக்கெடுப்பை தோற்கடிக்க தேவையான 117 வரவில்லையே?
வெற்றி பெற்றாலும் மத்திய அரசின் ஆதரவில்லாமல் முழு காலமும் பழநிசாமியால் ஆட்சி நடத்தி விட முடியுமா?
சசிகலா சிறையில் இருந்தவாறே ஆட்சி நடத்தி விட முடியாது. பொதுச்செயலாளராக கூட தொடர்ந்திட சட்டம் இடம் தராது.
உச்சநீதி மன்றத்தால் குற்றவாளி இன்று தீர்ப்பளிக்கப் பட்ட ஜெயலலிதாவின் புகைப்படத்தையோ பெயரையோ இனி அரசால் அதிகாரபூர்வமாக அரசு அலுவலகங்களில் பயன்படுத்த முடியுமா?
ஜெயலலிதா வின் ஆட்சியை தொடர்வோம் என்று சொல்பவர்கள் அவரது ஊழல் ஆட்சியை தொடர்வோம் என்று சொல்வதாகதானே பொருள்?
மீளாய்வு மனுவிலோ சீராய்வு மனுவிலோ தீர்ப்பு திருத்தப் பட்டால் தவிர ஜெயலலிதா என்பவர் ஊழல் குற்றவாளி. அவருக்குத் துணை நின்றோர்தான் இன்று சிறையில். எனவே மூலக் குற்றவாளியை விட துணை நின்றோர் தான் அதிக குற்றம் இழைத்தவர்கள் என்று சொல்லி தப்பி விட முடியாது.
தோற்றால் எந்தக் கட்சியாலும் நிலையான ஆட்சியை தர முடியா நிலையில் சட்ட மன்றத்தை கலைக்காமல் செயலற்ற நிலையில் வைத்து விட்டு தற்காலிகமாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல் படுத்த மத்திய அரசு தயாராகும்.
அந்தக் கால கட்டத்தில் பா ஜ க ஏதோ ஒரு அ தி மு க அணியை கூட்டாக கொண்டு இங்கே காலூன்ற முயற்சிக்கும்.
ஓ பி எஸ் அறிவித்த வாக்காளர் கண்டன பேரணி எங்கும் நடைபெற்றதாக தெரியவில்லை. அவரது வீட்டிலும் கூட்டம் குறைந்து விட்டது.
தீபா ஓ பி எஸ் வீட்டிற்கு சென்று ஆதரவு அளித்ததும் அவரது வீட்டிலும் கூட்டம் குறைந்து விட்டது. அவரை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைத்தவர்கள் ஒதுங்கி இருக்கலாம்.
சட்ட மன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றாலும் ஊழல் ஆட்சி நடத்தியவரின் ஆட்சி நீடிப்பதாகத்தான் பொருள்.
தோற்றாலும் தற்காலிக குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற நிலையில் ,
செலவைப் பார்க்காமல் மீண்டும் தேர்தல் நடத்தி ஒரு நிலையான அரசை அமைக்க ஏன் முயற்சிக்கக் கூடாது?
இல்லாவிட்டால் மாற்று ஏற்பாடாக திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுத்து அதிமுக அதிருப்தியாளர்கள் வெளியில் இருந்து ஆதரிக்க வேண்டும்.
செய்வார்களா? செய்வார்களா?