Latest News

நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்றத்தை அவமதித்தாரா ? நீதித்துறையில் அருவருப்பான காட்சிகள் ??!!!

Share

நீதிபதி கர்ணன் உயர்நீதிமன்ற நீதிபதியாக சென்னையில் இருந்தபோதே பல சங்கடமான சூழ்நிலைகள் தோன்றின.

சக நீதிபதிகள் குறித்து பல குற்றச்சாட்டுகளை எழுப்பியவர் அவர்.    அவை சம்பந்தமான எந்த விசாரணையும் நடந்ததாக தெரியவில்லை.

அவரை கல்கத்தா  உயர்நீதிமன்றத்துக்கு மாற்றிய போதும் அது தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியவர் அவர்.     ஒருவழியாக கொல்கத்தா சென்ற பிறகும் மீண்டும் அதே குற்றச்சாட்டுகளை சுமத்தி  உச்ச நீதிமன்றத்துக்கு கடிதங்கள் அனுப்புவதை விடவில்லை.

இப்படி குற்றம்  சுமத்தி கடிதம் எழுதுவது நீதிமன்ற அவமதிப்பு என்று உச்ச நீதிமன்றம் கருதியது.

விசாரணைக்கு  அழைத்தும் வராததால் இப்போது பிடி வாரண்டு அனுப்பும் வரை பிரச்னை சென்றிருக் கிறது.

இப்போதும் தனக்கு வாரண்டு பிறப்பிக்க உச்சநீதிமன்றத்து நீதிபதிகளுக்கு உரிமை  இல்லை  என்ற நிலைப்பாடு எடுத்த நீதிபதி கர்ணன் அவர்களுக்கே  வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று அறிவிப்பு அனுப்ப உத்தரவிடுகிறார்.

தான் பிரதமருக்கு இருபத்து இரண்டு நீதிபதிகள் மீது ஊழல்  , கையாடல்,  கற்பழிப்பு  உள்பட பல குற்றச்சாட்டுகளை சுமத்தி விசாரணை கோரி கடிதம் எழுதியதாகவும் விசாரணைக்கு  உத்தரவிடாமல் தன் மீது அவமதிப்பு வழக்கு தொடுத்து இருப்பது வன்கொடுமை  என்றும் பேட்டியளித்திருக்கிறார் .

உண்மையில் கர்ணன் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகள் மீது விசாரணை தேவைதானா என்பதை ஏன் உச்சநீதிமன்றம் அவரை வரவழைத்து உள் விசாரணை நடத்தி முடிவு    செய் திருக்க கூடாது. ?

பாராளுமன்றத்தில் தன்  மீது இம்பீச்மென்ட் என்ற நடவடிக்கையை வேண்டுமானால் எடுக்கலாமே தவிர உச்ச நீதி மன்ற நீதிபதிகள் தன் மீது இவ்விதமான நடவடிக்கை  எடுக்க முடியாது என்றும் கூறுகிறார்.

தான் தலித் என்பதாலேயே குறி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப் படுவதாக கூறுவது எப்படி பொருந்தும் என்பது தெரியவில்லை.

ஏனென்றால் அவர் தலித் ஆக இருப்பது அவர்  உயர் நீதிமன்ற நீதிபதி ஆவதற்கு தடையாக இருக்க வில்லையே? 

                       ஏழு நீதிபதிகள் முன்பு அவர் ஆஜராகி விளக்கம் தராவிட்டால் அவர் மீது பிணையில் வர முடியா பிடியாணை பிறப்பிக்கப்  படுவதும்   , ஆஜர் படுத்தப் பட்ட பின்பும் இதே நிலைப்பாட்டை அவர்  எடுத்தால் அவர் மீது தண்டணை  பிறப்பிக்கப் படுவதும் தவிர்க்க முடியாதது ஆகி விடும்.

மொத்தத்தில் நீதிபதிகளும் ,  நீதித்துறை நடைமுறைகளும்  பொதுமக்கள் விவாதத்துக்கும் விமர்சனத்துக்கும்  ஆளாகும்.

உண்மைகள் இதன் மூலம் வெளிவரும் என்பது நல்லதே என்றாலும் மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கை தரைமட்டமாகிவிடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஏற்கனெவே நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்றமும் மத்திய அரசும் உரசிக்கொண்டு இரு தரப்பிலும் செல்வாக்கு எப்படியெல்லாம் பங்கு வகிக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டினார்கள்.

 இவர்களா நமது தலைவிதியை நிர்ணயிக்கிறார்கள் என்று பொதுமக்கள் நொந்து கொள்ளும் நிலைமை வராமல் இருக்க வேண்டும். 

                   

This website uses cookies.