ஒரு முஸ்லிம் கணவன் தன் மனைவியை நோக்கி மூன்று முறை தலாக் தலாக் தலாக் என்று சொல்லிவிட்டால் அவன் தன் மனைவியை விவாக ரத்து செய்து விட்டான் என்று பொருள்.
அதைச் சொல்ல காரணம் எதையும் அவன் சொல்லத் தேவையில்லை.
ஏனெனில் அது குரான் அவனுக்கு கொடுத்திருக்கும் அதிகாரம்.
ஆனால் இதே உரிமையை மனைவி பயன் படுத்த முடியாது.
பல முஸ்லிம் பெண்கள் இந்த முறையை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தின் படிகளை தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
முதன் முறையாக மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் கடந்த அக்டோபர் ஏழாம்நாள் முத்தலாக் முறை பாலின சமத்துவத்திற்கும் மதச் சார்பின்மைக்கும் எதிரானது என்பதை விவாதிக்க வேண்டும் என்று சொன்னது.
வேறு யாரும் இதை சொல்லியிருந்தால் சாதாரணமாக எடுத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் சொல்வது பா ஜ க அரசாயிற்றே? பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கொள்கையில் உள்ள கட்சி சொல்லும்போது அதன் உள்நோக்கம் பற்றி சந்தேகம் வரத்தான் செய்யும்.
மத்திய அரசு தாக்கல் செய்த அவிடவிட்டில் பாலின சமத்துவம் , மதசார்பின்மை ,சர்வதேச உடன்படிக்கைகள் ,மத சம்பிரதாயங்கள், ஒப்பந்தங்கள் , பல இஸ்லாமிய நாடுகளில் நடைமுறையில் உள்ள முத்தலாக் முறை, பல தார திருமண முறை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப் பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.
மத்திய அரசின் இந்த முயற்சியை எதிர்த்து நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் தனி சட்டத்தில் மத்திய அரசு தலையிடுவதை ஏற்க மாட்டோம் என்று கையெழுத்து இயக்கம் துவக்கி இருக்கிறார்கள்.
எந்த சீர்திருத்தமும் அந்தந்த மதத்தில் இருந்தே வர வேண்டும்.
இந்து மதத்தில் இருந்த குழந்தை திருமணம் , தீண்டாமை உடன்கட்டை ஏறுதல் , போன்ற பல கொடுமைகள் இந்து சமுதாயத்தில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக இறுதியில் சட்டத்தின் மூலமே தடுக்கப் பட்டு சட்டம் இயற்றப் பட்டன.
எனவே தவறுக்கு மதம் சார்ந்த உரிமைகள் துணை நிற்க கூடாது.
பொது சிவில் சட்டம் என்பதை தாண்டி முஸ்லிம் பெண்களின் உரிமை பாதுகாப்பு என்பதை மட்டுமே கணக்கில் கொண்டு சமுதாய நீதி காக்கும் நோக்கில் இதை அணுகுவதுதான் சரியாக இருக்கும்.
முஸ்லிம் அமைப்புகள் தங்களுக்குள் ஒரு பொது விவாதத்தை துவக்கி இது தொடர்பாக அரசுக்கு தகுந்த பரிந்துரையை அளித்தால் அதை அரசு ஏற்றுக்கொண்டு அமுல்படுத்த முன்வந்தால் உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக சரியான தீர்ப்பை அளிக்க வாய்ப்பாக அமையும்.
செய்வார்களா??!!
ஆனால் எந்தக் காரணம் கொண்டும் கட்டாயப் படுத்தி சீர்திருத்தம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏனெனில் அதன் விளைவுகள் சமுதாய ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாகவே அமையும்.